43 திரு வார்த்தை
பதிகச் சிறப்பு: அறிவித்து அன்புறுதல்
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
கோதில் பரங்கரு ணையடியார் குலாவு நீதிகுண மாகநல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார்எம் பிரானாவாரே 1
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலந்திகழும்
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்கும் திறமறி வார்எம் பிரானாவாரே 2
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறி வார்எம் பிரானாவாரே 3
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே 4
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதியந்நாள்
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங் கைஅதனிற்
பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறி வார்எம் பிரானாவாரே 5
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவ னாய்க்கடி நாய்கள்சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கிஈசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே 6
நாத முடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே 7
பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணற்குத் தீயிற்றோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே 8
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளியன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே 9
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளியன்று
மங்கையர் மல்கு மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே 10
திருச்சிற்றம்பலம்