42 சென்னிப் பத்து
பதிகச் சிறப்பு: சிவ விளைவு
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலும் அறியொணா முதலாய ஆனந்த மூர்த்தியான்
யாவ ராயினும் அன்பரன்றி அறியொ ணாமலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண் நம்சென்னி மன்னிச் சுடருமே 1
அட்ட மூர்த்தி அழகன்இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெ ருந்துறைச் சேவகன்
மட்டு வார்குழல் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்தன்
வட்ட மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 2
நங்கை மீர்எனை நோக்குமின் நங்கள்நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந்துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே 3
பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்த னாகிவந் தில்புகுந்தெமை ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 4
மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி மதித்தி டாவகை நல்கினான்
வேய தோளுமை பங்கன்எங்கள் திருப்பெ ருந்துறை மேவினான்
காயத் துள்ளமு தூறஊறநீ கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 5
சித்த மேபுகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத்துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும் அப்பு றத்தெமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 6
பிறவி யென்னுமிக் கடலைநீந்தத்தன் பேர ருள்தந் தருளினான்
அறவை யென்றடி யார்கள்தங்கள் அருட்கு ழாம்புக விட்டுநல்
உறவு செய்தெனை உய்யக்கொண்ட பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 7
புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த னையொழி வித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான் என்னு டையப்பன் என்றென்று
தொழுத கையின ராகித்தூய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே 8
வம்ப னாய்த்திரி வேனைவாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
உம்ப ரான்உல கூடறுத்தப் புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்ப ரானவர்க் கருளிமெய்யடி யார்கட் கின்பந் தழைத்திடும்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 9
முத்த னைமுதற் சோதியைமுக்கண் அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோகனைத்திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின்நீர் உங்கள் பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம் சென்னி மன்னித் திகழுமே 10
திருச்சிற்றம்பலம்