35 அச்சப் பத்து
பதிகச் சிறப்பு: ஆனந்தம் உறுதல்
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.
தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.
திருச்சிற்றம்பலம்
புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 1
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பி ரானாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 2
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 3
கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ண ராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 4
பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியி னான்தன் தொழும்பரோ டழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 5
வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்பதங் கடந்த அப்பன்
தாளதா மரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 6
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்தஅம் பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாத மேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 7
தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்க மாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 8
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பி ரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 9
கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியி னானை நினைந்துநைந் துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே 10
திருச்சிற்றம்பலம்