31 கண்ட பத்து
பதிகச் சிறப்பு: நிருத்த தரிசனம்
யாப்பு: கொச்சகக் கலிப்பா
தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.
தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.
திருச்சிற்றம்பலம்
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள்தில்லை கண்டேனே 1
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே 2
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளமன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே 3
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோரும் காணஎன்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே 4
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே 5
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே 6
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே 7
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந்தில்லை கண்டேனே 8
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலமறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே 9
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே 10
திருச்சிற்றம்பலம்