21 கோயில் மூத்த திருப்பதிகம்

21 கோயில் மூத்த திருப்பதிகம்
பதிகச் சிறப்பு: அநாதியாகிய சற்காரியம்
யாப்பு: ஆசிரிய விருத்தம்

தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                         திருச்சிற்றம்பலம் 

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேனுன்
அடியார் நடுவுள் இருக்கும்அரு
ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே 1

முன்னின் றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று
போந்தி டென்னா விடில்அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே 2

உகந்தா னேஅன் புடையடிமைக்
குருகா உள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன்
பொன்னம் பலத்தெம் முழுமுதலே 3

முழுமுத லேஐம் புலனுக்கும்
மூவர்க் கும்என் தனக்கும்
வழிமுத லேநின் பழவடியார்
திரள்வான் குழுமிக்
கெழுமுத லேஅருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழுமது வேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம் பலத்தரைசே 4

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ 5

ஏசா நிற்பர் என்னைஉனக்
கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்கும்
திருவோ லக்கம் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே 6

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன்
என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வார் இலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள்
வாழ்வே வாவென் றருளாயே 7

அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ 8

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே 9

நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
அருளாய் என்னை உடையானே 10

                         திருச்சிற்றம்பலம்