17 அன்னைப் பத்து

17 அன்னைப் பத்து
பதிகச் சிறப்பு: ஆத்தும பூரணம்
யாப்பு: கலிவிருத்தம்

தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                         திருச்சிற்றம்பலம் 

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும் 1

கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர்
உண்ணின் றுருக்குவர் அன்னே என்னும்
உண்ணின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும் 2

நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும் 3

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவாறு அன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும் 4

நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும் 5

உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும் 6

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும் 7

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
தாளம் இருந்தவாறு அன்னே என்னும் 8

தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
நையும்இது என்னே அன்னே என்னும் 9

கொன்றை மதியமும் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவாறு அன்னே என்னும் 10

                         திருச்சிற்றம்பலம்