பாவகைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:
1 ஆசிரியப்பா (அகவற்பா) :
சங்க இலக்கியங்களிலும், சிலம்பு, மணிமேகலை போன்ற நூல்களிலும் பெருமளவு வருகின்றது. ஆசிரியப்பாவில் ‘ஆசிரிய உரிச்சீர்’ என்ற ஈரசைச் சீர்கள் விரவி வரும். இப்பா அளவடியாய் அமையும். குறைந்தளவு மூன்றடி, கூடுதலுக்கு எல்லை இல்லை. இப் பாவின் ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடியும். நிலைமண்டில ஆசிரியப்பா ‘என்’ என முடிவது சிறப்பு. ஓ ஈ ஆய் ஐ எனவும் முடியும். இது நேரிசை ஆசிரியப்பா1, இணைக்குறள் ஆசிரியப்பா2, நிலைமண்டில ஆசிரியப்பா3, அடிமறிமண்டில ஆசிரியப்பா4 என நால்வகையாகும்.
எ-டு: திருவண்டப் பகுதி, இறுதிப் பகுதி,
“கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையு மிருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்றேன் கலக்க
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே”
(தேர்-தேடுகின்ற. தேன்-சிவானந்தத்தேன்.
பராவமுது – தேவர்களிற்கான அமுது.
2
வஞ்சிப்பா:
குறளடியும், சிந்தடியும் கொண்டமையும். பெருமையாக மூவசைச் சீர்களிலமையும். அடிச்சிறுமை 3, பெருமை எல்லையில்லை. இறுதியில் ஒரு தனிச் சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் கொண்டு முடியும். இது குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா என இருவகைப்படும்.
எ-டு : கிவாஜ- தனிப்பாடல் இது:
“மாகத்தினர் மாண்புவியினர்
யோகத்தினர் உரைமறையினர்
ஞானத்தினர் நயஆகமப்
பேரறிவினர் பெருநூலினர்
காணத்தகு பல்கணத்தினர்
என்றே
இன்னன1 பல்லோர்2 ஏத்தும்3 பெருமான்4
மன்னவன் காந்த மலையுறை முருகனே “
இது குறளடி வஞ்சிப்பா. இறுதி இரண்டடிகளும் நாற்சீராக, ஆசிரியப்பாச் சுரிதகமாக வந்தது. இதே போல, முச்சீரடிகளாகவும், தனிச்சொல்லும், இறுதி அடிகளிரண்டும் ஆசிரியச் சுரிதகமாகவும் அமையின் அது ‘சிந்தடி வஞ்சிப்பா’ ஆகும்.
3 வெண்பா :
பாக்களிலே கூடிய விதிகளும், கடினமும் மிக்கது வெண்பாவே. வெண்பாவை ‘வன்பா’ என்றும் குறிப்பர். இதற்கு வெண்பாவுரிச்சீரான காய்ச்சீரும், இயற்சீரான ஈரசைச்சீரும் வரும். ஈற்றுச் சீரில் அசைச்சீரான ஓரசைச் சீர் வரும். இயற்சீர், வெண்சீர் வெண்டளைகளால் மட்டுமே அமையும். அளவடிகளாக வரும். ஈற்றடி மட்டும் சிந்தடி.
செப்பலோசை ஒரு விகற்பம் அல்லது இருவிகற்பம் கொள்ளும். ஈற்றுச் சீருக்கு நாள், மலர் வாய்பாடுகள்.
குற்றியலுகரமெனில் காசு, பிறப்பு வாய்பாடுகள்.
ஆசிரியப்பா – மென்பா
வெண்பா – வன்பா
கலிப்பா – முறற்கை.
வெண்பாவுக்கு குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளுள. தமிழில் வெண்பாக்கள் ஏராளமாகவுள்ளன. திருக்குறள், நாலடியார், முத்தொள்ளாயிரம். நளவெண்பா, நீதிவெண்பா, மூதுரை, நல்வழி அவற்றுட் சில.
எ-டு: இது ‘நாள்’ வாய்பாடமைந்த நேரிசை வெண்பா:
“நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப் -பண்ணின்
மொழியாளோடு உத்தர கோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனைக் காண்” (திருவாசகம்,பண்டாய நான்மறை- 5)
எ–டு: இது ‘மலர்’ வாய்பாடு.
“மூவரும் முப்பத்து மூவரு மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான் – மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே யின்ப மிகும் ” (திருவாசகம், திருவெண்பா – 9)
எ–டு: இது ‘காசு’ (நேர்பு அசை) வாய்பாடு:
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள் வெண்பா, வா/துணைநலம் – 60)
எ-டு: இது ‘பிறப்பு’ வாய்பாடு, (நிரைபு அசை)
” மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் — மன்னற்குத்
தன்தேசம் அல்லாற் சிறப்பில்லைக் கற்றோர்க்குச்
சென்ற விடமெல்லாம் சிறப்பு ” ( வாக்குண்டாம் – 26)
4 கலிப்பா :
நிரை முதலான புளிமாங்காய், கருவிளங்காய் மிகுத்துவரும் (வெண்பாவுரிச்சீர்) அளவடியிலமையும். பேரடிகளுக்கு எல்லையில்லை. சிறுமை நான்கடி. துள்ளலோசை கலிப்பாவிற்கு உறுப்புகள் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்பனவாம்.
சிவபுராணம் ‘கலி வெண்பா’ ஆகும். குமர குருபரரும் ‘கந்தர் கலிவெண்பா’ அருளியுள்ளார். இதன் பெயரையே கொண்டமைந்த சங்க இலக்கியம் ‘கலித் தொகை’ ஆகும்.
எ-டு: இது ‘நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. இதில் ஒரு தரவு மட்டும் வந்து நாலடியாய் அமைந்தது.
“கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்”
( பெ/புராணம், தடுத்தாட்கொண்டபுராணம், சுந்தரர் பரவையாரின் அழகில் வியந்தமை)
திருவாசகம், திருக் கோத்தும்பி- இதுவுமது:
“கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்ப னென்னொப்பில் என்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ ” ( 4 )
-- இவ் வகுப்பு நிறைவு -