Class 47

தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 9. தொ:பொரு: ‘ செய்யுளியல் ‘ (இயல் 8)

சென்ற வகுப்பில் ‘ தொடை விகற்பங்கள்’ பார்த்தோம். இவ் வகுப்பில் சிறப்பாகவும், பொதுவாகவும் வழக்கிலுள்ள சில ‘பொருண்மைச் சொற்களை ‘ யும், அவற்றின் பொருளையும் பார்ப்போம்:

  1. ‘ நூல் ‘ என்ன வென்பது ?

” அவற்றுள்,
நூலெனப் படுவது நுவலுங் காலை
முதலு முடிவும் மாறுகோளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே ” ( 478)

இ-ள்: முன்னும் பின்னும் மாறுபடாது, தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டி, அடங்கி நின்ற பொருள்
விரித்துச் சொல்லப்பட்டு, பருப்பொருளன்றி நுண் பொருளை விளக்குவதே ‘ நூல் ‘ ஆகும். எ-று

நூலின் வகைகள் நான்கு :

  1. தொகுப்பு நூல்
  2. வகுப்பு/பகுப்பு நூல்
  3. தொகுப்பு/ வகுப்பும் நூல்
  4. மொழிபெயர்ப்பு நூல்
  5. இவ்வகைகளின் தோற்றமுறைமை குறித்து, அவற்றை இரு வகைப்படுத்துகிறார். இதற்கான நூற்பாவை அறிந்து கொள்ள ‘ அரிமா நோக்கு ‘ செய்ய வேண்டும். இதற்கான நூற்பாக்கள் அடுத்த மரபியலில் காணலாம்.

” மரபுநிலை திரியா மாட்சிய வாகி
உரைபடு நூலா மிருவகை இயல
முதலும் வழியுமென நுதலிய நெறியின “
( 648)

இ-ள்:

மரபு நிலையில் திரியாமையைத் தமக்குக் குணனாக உடையவாகி, எல்லாராலும் உரைக்கப்படும் நூல் இரண்டாம். அவை முதனூலெனவும், வழிநூலெனவும் சொல்லிய முறையாம் எ-று

  1. ‘ முதனூல் ‘ இதுவாம்:

” வினையி னீங்கி விளங்கிய வறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும் ” ( 649)

இ-ள்:

செய்வினையின் பயன் துவ்வாது மெய்யுணர்வு உடையனாகிய முன்னோனாற் சொல்லப்பட்டதே ‘ முதனூலாகும் ‘ எ-று

“இங்கு ‘ முனைவன் ‘ என்றது ‘ அகத்தியன் ‘ என்றும், அவன் செய்த அகத்தியமே ‘ முதனூல் ‘ என்பதும், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதும் பெற்றாம் ” என்று பேராசிரியம் உரை செய்கிறது.

  1. ‘ வழிநூல் ‘ எது வெனல் :

” வழியெனப் படுவ ததன் வழித் தாகும் ” ( 650)

இ-ள்:

நுதலிய நெறியானன்றி, வழிநூல் என்றதற்குச் சிறப்புடையது அம் முதனூல் வழிப்பிறந்த வழிநூலே எ-று

ஆக அகத்தியம் முதனூல் என்றும், தொல்காப்பியம், பல்காப்பியமிரண்டும் வழிநூல்கள் என்றும் கொள்க!

சைவசிந்தாந்த மரபில்;

முதனூல் — சிவஞான போதம்
வழிநூல் — சிவஞான சித்தியார், இருபா இருப ஃ து என்பன.
சிவப்பிரகாசம் முதலிய சித்தாந்த அட்டகங்கள்
‘ சார்பு நூல்கள் ‘ என்றாகும். சார்பு நூல் என்றது பின்னால் நன்னூலார் குறித்தார் எனவறிக!

மேலும், நூல்களைப் பல வகைகளாக வகுத்து மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் உரைத்துள்ளார்.

மொழிநூல் — தொல்காப்பியம், பல்காப்பியம், பன்னிரு பாட்டியல், வீரசோழியம், நன்னூல், இன்னும் பல.

( மேலும் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றும் சொல்வன ‘ மூவிலக்கண நூல் ‘ என்றும் ( தொல்காப்பியம்)
எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆன ஐந்தும் கூறும் ‘ ஐந்திலக்கண நூல்’ என்றும் ( வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் என்றும் உள்ளன)

அறநூல்– அறம், பொருள், இன்பம், வீடு பற்றிக் கூறும் நூல்கள்.
திருக்குறளும், பலவும்

பொருள்நூல்– அறவழிப் பொருளீட்டல், பண் பாடுகள், மரபுகள், அரசியல் பற்றியுரைப்பன. திருக்குறள், தொல்காப்பியம், சிலம்பு இன்னும் பல.

இன்பநூல்– காமவுணர்வின் பாற்பட்ட நூல்கள். திருக்குறள், சீவக சிந்தாமணி போன்றன.

மறைநூல் — வேதவிளக்கம், சமய தத்துவ விளக்கம் பற்றி உரைக்கும் நூல்கள். இராமாயணம், பாரதம், போன்ற பல நூல்கள்.

பட்டாங்கு நூல் — பல்வேறு கொள்கை விளங்கங்கள், நடைமுறைகள் பற்றி உரைக்கும் நூல்கள்.

4
சொல்லப்பட்ட நூலுக்கு நால்வகைப் பகுதிகள் உரியன.

” ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்
இனமொழி கிளந்த வோத்தி னானும்
பொதுமொழி கிளந்த படலத் தானும்
மூன்றுறுப் படக்கிய பிண்டந் தானுமென்று
ஆங்கனை மரபின் இயலு மென்ப ” ( 480)

இ-ள்:

நூலுள் ஒரு பொருளையே நுதலி வருவது சூத்திரம்,

இனமாகிய பொருளினையே தொகுப்பது ஓத்து,

பல பொருட்கும் பொதுவாகிய இலக்கணம் கூறுவது படலம்,

மூன்றுறுப்புடையது பிண்டம். இவையே மரபில் இயலும் நூலாகும் எ-று

ஆக,
சூத்திரம் = ஆடி சிறிதாயினும் அகன்ற பொருளைக் காட்டுமா போல, அகன்ற பொருளை அடக்கிக் காட்டுவது.

ஓத்து = ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது, இயல் என்பதிதுவே.

படலம் = பல்வேறு வகைப்பட்ட பொருள் எல்லாவற்றிற்கும் வெவ்வேறு இலக்கணம் கூறிப் பொதுவாக வருவது. அதிகாரம் இதுவே.

பிண்டம் = மேற்சுட்டிய சூத்திரம், ஓத்து, படலம் ஆகிய மூன்றையும் தன்னுள் அடக்கி வருவது, காண்டம் என்பதுமிதுவே.

எ-டு : சூத்திரமென்ற ஓருறுப்பு மட்டும் கொண்டது ‘ இறையனார் களவியல்’

சூத்திரமும் ஓத்தும் என்ற ஈருறுப்பு கொண்டது ‘ பன்னிரு படலம்’

இம்மூன்றுறுப்பும் அடங்கிய பிண்டம் ‘ தொல்காப்பியம் – என்பார் நச்சினார்க் கினியர். மேலும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று பிண்டங்கள் கொண்ட நூலும் உள, அது ‘ சிலப்பதிகாரம் ‘ அகத்தியமும் அடங்கும் என்பர்.

  • இவ் வகுப்பு நிறைவு –