திருமுறை 1

திருஞான சம்பந்த சுவாமிகள் அருளியது

  • பதிகம்:132, ஊர்: திரு வீழிமிழலை

    பதிகம்:132, ஊர்: திரு வீழிமிழலை
    பண்: மேகராகக்குறிஞ்சி இராகம்: நீலாம்பரி

    ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கி நின்று
    நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன் நின்ற கோயில்
    பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு
    வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை யாமே 1

    பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர் கூடி
    மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங் கோயில்
    செறியிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
    வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலை யாமே 2

    எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம் புரமூன்றும் எழிற்கண் நாடி
    உழுந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோன் உறையுங் கோயில்
    கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம் முகங்காட்டக் குதித்து நீர்மேல்
    விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலை யாமே 3

    உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம்
    நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில்
    வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல நடமாட வண்டு பாட
    விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலை யாமே 4

    காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
    பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான் கோயில்
    தாணுவாய் நின்றபர தத்துவனை உத்தமனை இறைஞ்சீ ரென்று
    வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலை யாமே 5

    அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம்
    புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் கோயில்
    தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத் தீயுள்
    மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யும் மிழலை யாமே 6

    ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப் பாவை
    கூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங் கோயில்
    சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு
    வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலை யாமே 7

    கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலை யென்னும்
    பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரற் புனிதர் கோயில்
    தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டி யீண்டு
    விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலை யாமே 8

    செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமோ டன்ன மாகி
    அந்தமடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமருங் கோயில்
    புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற் கொண்டு
    வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேருமூர் மிழலை யாமே 9

    எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர் சாக்கியரும் என்றுந் தன்னை
    நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரியும் நாதன் கோயில்
    பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு
    விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலை யாமே 10

    மின்னியலும் மணிமாடம் மிடைவீழி மிழலையான் விரையார் பாதம்
    சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலு நாவன்
    பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்து மேத்தி
    இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில் ஈசனெனும் இயல்பி னோரே 11
    திருச்சிற்றம்பலம்.