திருவாசகம்

  • 10 திருக் கோத்தும்பி

    10 திருக் கோத்தும்பி
    பதிகச் சிறப்பு: சிவனோடு ஐக்கியம்
    யாப்பு: தரவு கொச்சகக் கலிப்பா

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
    நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
    மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச்
    சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 1

    நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார்
    வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
    ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
    தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ 2

    தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
    நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
    அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
    குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 3

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
    சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ 4

    அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
    பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
    பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
    மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ 5

    வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்
    பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
    சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
    வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ 6

    சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக்
    கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
    ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
    சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ 7

    ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ கவடுவிட்டு
    நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
    என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
    குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ 8

    கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறைமிடற்றன்
    சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
    மரணம் பிறப்பென்று இவையிரண்டின் மயக்கறுத்த
    கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 9

    நோயுற்று மூத்துநான் நுந்துகன்றாய் இங்கிருந்து
    நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாம்
    தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
    தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ 10

    வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
    கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
    அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
    பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 11

    நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
    பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
    சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
    தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ 12

    நான்தனக்கு அன்பின்மை நானும்தா னும்அறிவோம்
    தானென்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவார்
    ஆன கருணையும் அங்குற்றே தானவனே
    கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ 13

    கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
    மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
    அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
    திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ 14

    நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
    தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
    வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
    தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 15

    உள்ளப் படாத திருவுருவை உள்ளுதலும்
    கள்ளப் படாத களிவந்த வான்கருணை
    வெள்ளப் பிரான்எம்பி ரான்என்னை வேறேஆட்
    கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 16

    பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும்
    மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
    ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்தன்
    செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ 17

    தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
    சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ 18

    கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
    வள்ளல் வரவர வந்தொழிந்தான் என்மனத்தே
    உள்ளத் துறுதுயர் ஒன்றொழியா வண்ணமெல்லாம்
    தெள்ளும் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 19

    பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று
    ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
    நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
    தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ 20

                             திருச்சிற்றம்பலம்