திருவாசகம்

  • 34 உயிருண்ணிப் பத்து

      34 உயிருண்ணிப் பத்து
      பதிகச் சிறப்பு: சிவானந்தம் மேலிடுதல்
      யாப்பு: கலிவிருத்தம்

      தலம்: திரு பெருந்துறை
      இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
      இறைவி: யோகாம்பாள்
      இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

      தலக்குறிப்பு:
      மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                               திருச்சிற்றம்பலம் 

      பைந்நாப்பட அரவேரல்குல் உமைபாகம தாய்என்
      மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடாவிடைப் பாகா
      செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்
      எந்நாட்களித் தெந்நாள்இறு மாக்கேன்இனி யானே 1

      நானாரடி யணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு
      ஊனாருடல் புகுந்தான் உயிர்கலந்தான் உளம்பிரியான்
      தேனார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை உறைவான்
      வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே 2

      எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்
      மனவாசகங் கடந்தான்எனை மத்தோன்மத்த னாக்கிச்
      சினமால்விடை உடையான்மன்னு திருப்பெருந்துறை உறையும்
      பனவனெனைச் செய்தபடிறு அறியேன்பரஞ் சுடரே 3

      வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர்விய னுலகில்
      எனைத்தான் புகுந்தாண்டான்என தென்பின்புரை யுருக்கிப்
      பினைத்தான்புகுந் தெல்லேபெருந் துறையில்உறை பெம்மான்
      மனத்தான்கண்ணின் அகத்தான்மறு மாற்றத்திடை யானே 4

      பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
      நற்றாங்கதி யடைவோமெனிற் கெடுவீரோடி வம்மின்
      தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
      கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே 5

      கடலின்திரை யதுபோல்வரு கலக்கம்மலம் அறுத்தென்
      உடலுமென துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்
      சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
      படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான்செய்த படிறே 6

      வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம் வேண்டேன் மண்ணும்விண்ணும்
      வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம் வேண்டார்தமை நாளும்
      தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள்
      பூண்டேன்புறம் போகேன்இனிப் புறம்போகலொட் டேனே 7

      கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய்அமு தென்கோ
      ஆற்றேன்எங்கள் அரனேஅரு மருந்தேஎன தரசே
      சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்
      நீற்றார்தரு திருமேனிநின் மலனேஉனை யானே 8

      எச்சம்அறி வேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்
      அச்சோஎங்கள் அரனேஅரு மருந்தேஎன தமுதே
      செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான்
      நிச்சமென நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே 9

      வான்பாவிய உலகத்தவர் தவமேசெய அவமே
      ஊன்பாவிய உடலைச்சுமந் தடவிமரம் ஆனேன்
      தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
      நான்பாவியன் ஆனால்உனை நல்காயென லாமே 10

                               திருச்சிற்றம்பலம்