திருவாசகம்

  • 37 பிடித்த பத்து

    37 பிடித்த பத்து
    பதிகச் சிறப்பு: முத்திக் கலப்பு உரைத்தல்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: திரு தோணிபுரம்
    இறைவர்: பிரமபுரீசுவரர், தோணியப்பர்
    இறைவி: திருநிலைநாயகி, பெரியநாயகி
    இருப்பிடம்: மயிலாடுதுறை – சிதம்பரம் வழியில் உள்ளது. சீர்காழியின் மறுபெயர்.

    தலக்குறிப்பு:
    சம்பந்தர் அவதரித்த தலம். சம்பந்தருக்கு ஞானப்பால் அளித்து ஆட்கொண்ட தலம். குரு, சங்கம, இலிங்க மேனிகள் தனித்தனியே இக்கோயிலில் உள்ளன. சம்பந்தருக்கு ஞானப்பால் அருளியவர் குரு மூர்த்தமாக தோணியப்பர், பெரிய நாயகி என்னும் திருவுருங்களில் எழுந்தருளியுள்ளனர். பன்னிரண்டு பெயர்களை உடையது. சம்பந்தரின் “பல்பெயர்பத்து’ எனனும் பதிகம் இப்பெயர்களை விளக்குகிறது. சுவாமி-அம்மன் கோயில்களுக்கிடையே ஞானசம்பந்தர் ஆலயம் உள்ளது.

                             திருச்சிற்றம்பலம் 

    உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
    யோகமே ஊற்றையேன் தனக்கு
    வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
    வாழ்வற வாழ்வித்த மருந்தே
    செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
    செல்வமே சிவபெரு மானே
    எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 1

    விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
    வினையனே னுடையமெய்ப் பொருளே
    முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
    முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
    கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
    கடவுளே கருணைமா கடலே
    இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 2

    அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 3

    அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
    பெருந்திறல் அருந்தவர்க் கரசே
    பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
    போகமே யோகத்தின் பொலிவே
    தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
    செல்வமே சிவபெரு மானே
    இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 4

    ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
    உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
    மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
    விழுமிய தளித்ததோர் அன்பே
    செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
    செல்வமே சிவபெரு மானே
    எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 5

    அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு
    அளவிலா ஆனந்த மருளிப்
    பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
    பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
    திறவிலே கண்ட காட்சியே அடியேன்
    செல்வமே சிவபெரு மானே
    இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 6

    பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
    பற்றுமா றடியனேற் கருளிப்
    பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
    பூங்கழல் காட்டிய பொருளே
    தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
    செல்வமே சிவபெரு மானே
    ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 7

    அத்தனே அண்ட ரண்டமாய் நின்ற
    ஆதியே யாதுமீ றில்லாச்
    சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
    செல்வமே சிவபெரு மானே
    பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
    பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
    எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 8

    பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
    பரிந்துநீ பாவியே னுடைய
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆனந்த மாய
    தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
    செல்வமே சிவபெரு மானே
    யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 9

    புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
    பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
    என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
    ஈசனே மாசிலா மணியே
    துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
    தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
    இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே 10

                             திருச்சிற்றம்பலம்