திருவாசகம்

  • 39 திருப் புலம்பல்

    39 திருப் புலம்பல்
    பதிகச் சிறப்பு: சிவானந்த முதிர்வு
    யாப்பு: கொச்சகக் கலிப்பா

    தலம்: திரு ஆரூர்
    இறைவர்: புற்றிடங்கொண்டார்
    இறைவி: அல்லியம் பூங்கோதை
    இருப்பிடம்: மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களிலிருந்து செல்லலாம்.

    தலக்குறிப்பு:
    பல பெருமைகளை உடையது. மிகப்பழமை வாய்ந்த கோயில். மூவராலும் சிறப்பிக்கப்பட்டது. சுந்தரருக்காக சிவபெருமான் தூது சென்ற ஊர். இவ்வூரில், ‘பூங்கோயில்’, ‘அரநெறி’, ‘பரவையுண்மண்டளி’ என மூன்று பாடல் பெற்ற கோயில்கள் உள்ளன. இவற்றுள் பூங்கோயில் என்பதே திருவாரூரரைக் குறிக்கும் மூலட்டானக் கோயிலாகும். இதற்கு மட்டும் முப்பத்து நான்கு பதிகங்கள் உள. திருவாரூரில் பிறக்க முத்தி என்பர். அடியார்களின் வரலாறான திருத்தொண்டத்தொகை அருளப்பட்ட தலம். தியாகேசர் எழுந்தருளியுள்ள ஏழு விடங்கத் தலங்களுள் மூல மூர்த்தியை உடையது. திருக்கோயில், திருக்குளம், செங்கழுநீர் ஓடை ஆகிய மூன்றுமே தனித்தனியே ஐந்து வேலி நிலப்பரப்புடைய மாபெரும் கோயில். பஞ்ச பூதத் தலங்களில் நிலத் தலம் என்பர். ‘திருவாரூர் தேர்’ என்ற பழமொழி தேர் விழாவின் சிறப்பைத் தெரிவிக்கும். திருவாதிரைத் திருவிழாவின் சிறப்பை அப்பரே பதிகம் பாடி சம்பந்தருக்குத் தெரிவிக்கிறார். பங்குனி உத்திர திருவிழாவின் நினைவு வரவே, சுந்தரர் தம் சூளுரையையும் மறந்து ஒற்றியூரிலிருந்து திருவாரூருக்குப் புறப்பட்டார் என பெரியபுராணம் கூறுகிறது. இங்கே கமலாம்பிகை தனிக் கோயிலில் யோக நிoலியில் எழுந்தருளியுள்ளார்.
    சுந்தரர் விருத்தாசலத்தில் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, இங்குள்ள கமலாலயத் திருக்குளத்தில் எடுத்து பரவை நாச்சியாருக்கு அளித்தார். ‘மீளா அடிமை’ என்ற பதிகம் பாடிய சுந்தரருக்கு இறைவன் வலக்கண் அருளிய தலம். ‘திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்’ எனச் சுந்தரரே மொழிவதால், இத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது.

                             திருச்சிற்றம்பலம் 

    பூங்கமலத் தயனொடுமால் அறியாத நெறியானே
    கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடீ
    ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே 1

    சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
    படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
    விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
    உடையானே உனையல்லா துறுதுணைமற் றறியேனே 2

    உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
    கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
    குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
    கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே 3

                             திருச்சிற்றம்பலம்