51 அச்சோப் பதிகம்
பதிகச் சிறப்பு: அநுபவ வழி அறியாமை
யாப்பு: கலிவிருத்தம்
தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.
தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.
திருச்சிற்றம்பலம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 1
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும் வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே 2
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 3
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 4
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே 5
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 6
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 7
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 8
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே 9
திருச்சிற்றம்பலம்