19 திருத் தசாங்கம்

19 திருத் தசாங்கம்
பதிகச் சிறப்பு: அடிமை கொண்ட முறைமை
யாப்பு: நேரிசை வெண்பா

தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                         திருச்சிற்றம்பலம் 

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று 1

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி 2

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் – கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர் 3

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் – தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தம் காணுடையான் ஆறு 4

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் – நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து 5

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே – எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து 6

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய் – ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடைகாண் கைக்கொள் படை 7

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் – அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை 8

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் – தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார் 9

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாங் கொடி 10

                         திருச்சிற்றம்பலம்