2 கீர்த்தித் திருவகவல்

2 கீர்த்தித் திருவகவல்
பதிகச் சிறப்பு: சிவனது திருவருள் புகழ்ச்சி முறைமை
யாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பா
தலம்: கோயில் (சிதம்பரம்)

இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                         திருச்சிற்றம்பலம் 

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்புமீ தூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் 10

கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியில் பான்மொழி தன்னொடும்
எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும் 20

நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் 25

கூறுடை மங்கையும் தானும்வந் தருளிக்
குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தற்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டி யன்தனக் குப்பரி மாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி யிருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநக ரிருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்திருந் தருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்தினி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்தினி தருளிப்
பாவ நாச மாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்கா டதனில் 60

குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாங்காய் இருந்தங்கு
அட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னில் கரந்த கள்ளமும் 65

மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி யூரின் உகந்தினி தருளிப்
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவா ரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு ததனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்தவப் பரிசும்
ஏகம் பத்தின் இயல்பா யிருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ் சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயா றதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும்
கழுமல மதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
புறம்பய மதனில் அறம்பல அருளியும் 90

குற்றா லத்துக் குறியா யிருந்தும்
அந்தமில் பெருமை அழல்உருக் கரந்து
சுந்தர வேடத் தொருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந் தருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத் திழிந்துவந்து அழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற்கு அளவறி யாதவன் 115

பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
உத்தர கோச மங்கையூர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்
இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருண்மலை யாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
நாயி னேனை நலமலி தில்லையுள்
கோல மார்தரு பொதுவினில் வருகென
ஏல என்னை ஈங்கொழித் தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
மாலது வாகி மயக்க மெய்தியும்
பூதல மதனில் புரண்டுவீழ்ந் தலறியும்
கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்றழு தரற்றிப் பாத மெய்தினர் பாத மெய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநா டகஎன்று
இதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புடை யம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் 145

ஒலிதரு கயிலை உயர்கிழ வோனே 146

                         திருச்சிற்றம்பலம்