26 அதிசயப் பத்து
பதிகச் சிறப்பு: முத்தி இலக்கணம்
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே
செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 1
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏத மேபிறந் திறந்துழல் வேன்தனை என்னடி யானென்று
பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற
ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 2
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 3
பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரண மிதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 4
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேநின்று குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 5
எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 6
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 7
நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 8
உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்ற வாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே 9
இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இதுவித்தைப்
பொருளெ னக்களித் தருநர கத்திடை விழப்புகு கின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே 10
திருச்சிற்றம்பலம்