36 திருப் பாண்டிப் பதிகம்
பதிகச் சிறப்பு: சிவானந்த விளைவு
யாப்பு: கட்டளைக் கலித்துறை
தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்றுமி லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே 1
சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக்
குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே 2
நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை உள்ளங்கொண்டார்
பேரின்ப வெள்ளத்துட் பெய்கழ லேசென்று பேணுமினே 3
செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன்நன்னாட்டு
இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம்எக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே 4
காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின் கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே 5
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லன்அல்லன்
வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தாள்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே 6
மாய வனப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே 7
அழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக்
கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப்
பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே
முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே 8
விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்கப்
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேற்கொண்டு தம்மையுந் தாம்அறி யார்மறந்தே 9
கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென் றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானுமோர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே 10
திருச்சிற்றம்பலம்