சென்ற வகுப்பில் மோனை எதுகைத் தொடைகள், அவற்றிற்குரிய கிளை எழுத்துகள் வருக்க மோனை, வருக்க எதுகை, நெடில் மோனை, நெடிலெதுகை, உயிர் மோனை, உயிரெதுகை, மூவின எதுகை என்பன கற்றோம்.
1. ‘ ஆசிடை எதுகை’ / ஆசிடையிட்ட எதுகை :
ய் ர் ல் ழ் ஆகிய எழுத்துகளும், மெய்யெழுத்துகளும், எதுகையைக் குறிக்கும் இரண்டாமெழுதிற்கு முன்னால் வரின்,
அது ‘ஆசிடை எதுகை’ ஆகும்.
எ-டு:
” எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு ” ( குறள் – 110)
2.
அடுத்து ‘முரண் தொடை’
“மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே” (407)
இ-ள்:
சொல்லும் பொருளும் பகைத்தல் காரணமாக
‘முரண்தொடை’ வரும் எ-று
இம் முரணானது ஐவகைப்படும்.
— சொல்லும் சொல்லும் முரணுதல்
— பொருளும் பொருளும் முரணுதல்
— சொல்லும் பொருளும் சொல்லோடு முரணுதல்
— சொல்லும் பொருளும் பொருளோடு முரணுதல்
— சொல்லும் பொருளும் சொல்லோடும் பொருளோடும் முரணுதல் ஆவன ஐந்துமாம்.
எ-டு: ( திருக்களிற்றுப்படியார்- வெண்பா 58)- பரமுத்தியின் இயல்பு:
“ஒன்றன்று இரண்டன்று உளதன்று இலதன்று
நன்றன்று தீதன்று நானன்று — நின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன்று அடியன்று தான் “
அடுத்து, ‘இயைபுத் தொடை’ பற்றி உரைக்கிறார்.
“இறுவா யொன்ற லியையின் யாப்பே” 408
இ-ள்:இரண்டடியும் ஈறொத்தல் இயைபுத் தொடை இலக்கணமே எ-று.
எ-டு: திருவையாறுத் திருப்பதிகம், 4:38 அப்பரடிகள்: இப் பதிகத்தே அடிதோறும் இயைபுத்தொடை வந்தது கண்டு வியந்து மகிழ்க! (65)
” கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவம் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாற னாரே “
இது அடியிறுவாய் ஒன்றிய இயைபுத் தொடை. அது சீர்தோறும் இறுவாய் வந்து இசை நிரப்பும்.
“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே ” (திருமந்திரம்)
இங்கு ‘னை’ என்பது 6 தடவைகள் வந்தன காண்க. இது சீரிறுவாய் வந்த இயைபுத் தொடையாகும்.
கண்ணதாசனின் “பார்த்தேன் சிரித்தேன்’
கண்ணதாசனின்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இவளென மலைத்தேன் …….
அம்மானை அழகுமிகும் கண்மானை
ஆடிவரும் பெண்மானை தேடிவரும் பெருமானை
4 அடுத்து ‘அளபெடைத் தொடை’ பார்ப்போம்.
“அளபெழின் அவையே அளபெடைத் தொடையே” (409)
இ-ள்:
அடிமுதற்கண் எழுத்துகள் அளபெழுந்தனவாயின், அவை ‘ அளபெடைத்தொடை’ எனப்படும். இங்கு ‘அவையே’ என்பது உயிரளபெடையும், ஒற்றளபெடையும் ஆம்.
எ-டு: நக்கீரர் திருமுரு காற்றுப்படை.
” பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ..”
” தலைப்பெய தலைஇய தண்ணறுங் கானத்து..”
“திரள்படப் பொதுளிய பராரை மராஅத்து…”
” கிண்கிணி கலைஇய ஒண்செஞ் சீறடி..” /
இவையாவும் உயிரளபெடைகள். ஒற்றளபெடை என்பது
ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் ஆகிய 10 ஒற்றெழுத்துகளும் தமக்கான 1/2 மாத்திரையிலிருந்து ஒரு மாத்திரையாக நீண்டு ஒலிப்பதாகும். எ-டு: அங்ங்கனம், கவிஞ்ஞன், காவ்வ்யம்.
5
அடுத்ததாக, ‘பா வகைகள்’ பற்றி நோக்குவோம்:
“ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியென நாலியற் றென்ப பாவகை விரியே” (417)
இ-ள்:
ஆசிரியப்பாவும், வஞ்சிப்பாவும், வெண்பாவும், கலிப்பாவும் என பாக்கள் நால்வகைத்து எ-று
— இவ் வகுப்பு நிறைவு —