Class 14

இலக்கண வகுப்பு – 14
தொல்:எழு: இயல் 9

‘ குற்றியலுகரப் புணரியல்’ தொடர்ச்சி, (எழுத்ததிகாரம் நிறைவுப் பகுதி)

சென்ற வகுப்பில் குற்றியலுகரப் புணர்ச்சி பற்றியும், எண்ணுப் பெயர்களின் புணர்ச்சி பற்றியும் பார்த்தோம்.

பத்து என்ற சொல்லுடன் புணரும் எண்ணுப் பெயரொடு இன் சாரியை வருமென்றும், இரண்டுக்கல்ல என்றும் அறிந்தோம்.
1
பத்தின் முன் இரண்டு வந்து புணருவதைத் தனியொரு நூற்பாவினால் விளக்குகிறார்.
” பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை ” ( 29-435) copied

இ-ள்:
( மேற் சூத்திரத்தில் ‘ இன் ‘ பெறாதென்று விலக்கிய இரண்டு என்ற எண்ணுப் பெயருக்கு தனியே புணர்ச்சி கூறுகிறார்)
பத்து என்னும் சொல்லின் நின்ற தகர ஒற்றுக்கெட, னகர ஒற்று வந்து இரட்டுதல், இரண்டு என்னும் எண்வரும் காலத்தே பொருந்திற்று எ-று
எ-டு:
பத்து + இரண்டு = பன்னிரண்டு copied

2
எண்ணுப் பெயரோடு பத்து என்ற குற்றுகரம் எவ்வாறு பொருந்தி நின்றது என்பதைக் கூறுகிறார்:
” ஒன்று முதலொன்பான் இறுதி முன்னர நின்ற பத்த னொற்றுக் கெட வாய்தம் வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப கூறிய இயற்கைக் குற்றியலுகரம் ஆற னிறுதி அல்வழி யான ” ( 32-438)
இ-ள்:
ஒன்று முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப் படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், வருமொழியாய் வந்த பத்து எனும் சொல்லினது தகர ஒற்றுக்கெட, ஆய்தமானது வந்து இடையில் நிலை பெறும்.
அல்லாதவிடத்து குற்றியலுகரம் மேற்கூறிய மெய்யொடும் இயற்கையாய்க் கெட்டு முடியும். எ-று

எ-டு:
ஒன்று+பத்து= ஒருப ஃ து
இருப ஃ து, முப்ப ஃ து

அல்வழிப் புணர்ச்சியில்,
ஒன்று+பத்து= ஒருபது, இருபது,முப்பது
(அருணந்தியாரின் நூலுக்கு ‘ இருபா இருப ஃ து ‘ என்று பெயர்) copied

3
எட்டு என்ற எண் புணருமாறு :
” எட்டன் ஒற்றே ணகார மாகும் ” ( 38- 444 )
இ-ள்:
எட்டு என்ற எண்ணின் கண் நின்ற டகாரவொற்று ணகார ஒற்றாய் முடியும்.

எ-டு:
எட்டு+பத்து= எண்பது
எட்டு+குணம்= எண்குணம்
எட்டு+திசை=
எண்தி (டி) சை
எட்டு+சித்தர்= எண்சித்தர்
ஐயன் வள்ளுவனாரும்,

” கோள்இல் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை “
இ-ள்:
கொள்வது கோள். இவ் வேர்ச் சொல்லிலிருந்தே
‘ கொள்கை ‘ என்ற சொல் பிறந்தது. இல் — இல்லாமை. பொறியில் — இங்கு வந்த இல் இடப் பொருளில் 5 ஆம் வேற்றுமையில் வந்தது காண்க. Copied

4
மேலும் சில எண்ணுப் புணர்ச்சிகளைச் சுருக்கம் கருதி, சூத்திரங்களைச் சுட்டாது, புணருமாற்றைத் தருகிறேன்:

ஒன்று+ஆயிரம்= ஓராயிரம்,

இரண்டு+ஆயிரம்= ஈராயிரம்

மூன்று+ஆயிரம்= மூவாயிரம், முவ்வாயிரம்

நான்கு+ஆயிரம்= நாலாயிரம், நான்காயிரம்

ஒன்பது+ஆயிரம்= ஒன்பதினாயிரம் ( இன் சாரியை)

நூறு+ஒன்று= நூற்றொன்று copied

5
இரண்டு முதல் ஒன்பது எண்ணின் முன் ” மா ” என்னும் சொல் வருமாறு:

‘மா’ என்பது பண்டைய அளவீட்டுச் சொல்.

ஒன்று+மா = ஒருமா
இரண்டு+மா = இருமா
மூன்று+மா= மும்மா copied

இச் சொற்களையும், ஏனைய சில அளவுச் சொற்களையும் வைத்துக் காளமேகப் புலவர் சிலேடை வெண்பா பாடியுள்ளார்:

” முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டஞ்சாமுன் — விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது “

வெளிப்படையான கருத்து தெரிந்தது.
மறைபொருள் :
முக்கால் — மூன்றாவது காலாகிய ஊன்றுகோல்
முன்னரை — முடி முன்பக்க நரை
அக்காலரை — அக்+கால்+அரை ( அக் காலனான எமனை)
கால்அஞ்சா — கால்கள் அஞ்சி நடுங்காமல்
இருமாமுன் — இருமி உயிர்விட முன்
மாகாணிக்கு – சுடலைக்கு
ஒருமா – ஒற்றைமான் copied

அளவீடுகள் :
முக்கால் – 3/4
முன் அரை — 1/2
காலரைக்கால் — 3/8
இருமா — 1/10
மாகாணி — 1/16
ஒருமா — 1/20 copied

6
இது எழுத்ததிகாரத்தின் இறுதிச் சூத்திரமாகும்:
இதில் எழுத்ததிகாரத்திற்குப் புறநடை சொல்கிறார்:
” கிளந்த வல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் ” ( 77-483)
இ-ள்:
முதல் எடுத்தோதிய அல்லாதன செய்யுளிடத்து
வேறுபட வருவனவற்றையும், வழக்கு நடத்துமிடத்து மருவுதலோடு வேறுபட வருவனவற்றையும், முன்பு சொன்ன முடிபியற்கையின் வேறுபடத் தோன்றின், நல்லறிவின் ஆராய்ச்சியினால் வழக்கு இயலுமிடத்து, அவற்றின் முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக எ–று
— எழுத்ததிகாரம் முற்றிற்று —