உயிர்க் குறில் 5 :
“அவற்றுள், அ இ உ எ ஒ வென்னும் அப்பால் ஐந்தும் ஓரளபிசைக்கும் குற்றெழுத் தென்ப ” –3
இது அளவும் குறியும் உணர்த்திற்று. இக் குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று. குற்றெழுத்து, குறில், குற்றுயிர், குறுக்கம் என்றும் குறிப்பர்.
உயிர் நெடில் 7 :
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பா லேழும் ஈரளபிசைக்கும் நெட்டெழுத் தென்ப ” – 4
இவற்றுக்கு மாத்திரை இரண்டு. நெட்டுயிர், நெடில், நெட்டெழுத்து, நீட்டம் என்றும் உரைப்பர்.
மாத்திரைக்கு அளபு :
“கண்ணிமை நொடிஎன அவ்வே மாத்திரை; நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே ” – 7
இங்கு கண்ணிமைத்தலுக்கும், நொடிக்கும் ஓசையை அளவிடுக. நொடித்தலை விட இமைத்தலே சிறந்ததாம்.
மெய் 18:
” னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப ” (9)
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – இதற்கு 1/2 மாத்திரை.
எ-டு: காக்கை, பாங்கு….
வகைகள் 3 : வல்லின மெய் – 6, மெல்லினமெய் : 6, இடையின மெய் : 6
வல்லின மெய் – 6
க் ச் ட் த் ப் ற் – இவை மெய்யெழுத்து வரிவடிவம்.
இவை உயிர்மெய் வரிவடிவில் க ச ட த ப ற என வரும். இவை வல்லெழுத்து, வல்லினம், வல்லாறு, வன்கணம் எனவும் வழங்கும்.
மெல்லினமெய் : 6
ங் ஞ் ண் ந் ம் ன் – இவை மெய் வரிவடிவம். ங ஞ ண ந ம ன என்பது உயிர்மெய் வடிவம். இவை மெல்லெழுத்து, மெல்லினம், மெல்லாறு, மென்கணம் எனவும் வழங்கும்.
இடையின மெய் : 6
ய் ர் ல் வ் ழ் ள்- இவற்றின் உயிர்மெய் வடிவம் ய ர ல வ ழ ள என வரும்.
இம்மூவினங்களையும் கூட்ட 18 மெய்களும் வரும். இங்கு மெய்க்கு 1/2 மாத்திரை, உயிர்மெய்க்கு ஒரு மாத்திரை.
உயிர்மெய் எழுத்தின் இயல்பு ;
“புள்ளியில்லா எல்லா மெய்யும் உருவுறு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த வாறே ” – 17
இச் சூத்திரம் உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்திற்று.
மெய்கள் எல்லாம் புள்ளியில்லாத படிக்கு, தத்தமது முன்னை வடிவே பின்னும் வடிவாக, அகரத்துடன் கூடி ஒலித்தலும், ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய, அவ்விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும் முறைமையாம்.
தமிழ்நெடுங் கணக்கு என்ற தொகை :
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18
உயிர்மெய்யெழுத்து 216
ஆய்தம் 1
ஆக. 247
மயக்கம், பிறநிலை, உடனிலை என இருவகை.
“அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியும் காலை ” – 22
18 மெய்களும் மொழியாக வழங்குமிடத்து மெய்ம் மயக்கம் என்றும் உடனிலை மயக்கம் எனவும் வழங்கும்.
தனிமெய் பிற மெய்யுடன் மயங்குமாறு:
“டற லள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய ” (23)
டறலள எனப்பட்ட புள்ளிகளின் முன்னால், கசப என்னும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரியன.
எ-டு கட்க. கற்க. செல்க. கொள்க. கட்சி செய்ப கொள்ப.
” ங ஞ ண ந ம ன வெனும் புள்ளி முன்னர்த் தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே ” (25)
ஙஞணநமன என்ற புள்ளிகளின் முன்பு தத்தமக்கு மேல் நிற்கும் எழுத்தாகிய கசடதபற க்கள் பொருந்தி மயங்கின.
எ- டு: தெங்கு மஞ்சு மண்டு, பந்து, கம்பு, கன்று, இவை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.
தனிமெய் தன்மெய்யோடு மயங்குவது :(உடனிலை)
“மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முன் தாம்வரூஉம் ரழலங் கடையே” (30)
ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.
எ-டு:
காக்கை எங்ஙனம் பச்சை மஞ்ஞை பட்டை மண்ணை
தத்தை வெந்நோய் அப்பை அம்மி வெய்யர் பல்லி எவ்வி கொள்ளி கொற்றி கன்னி.
இங்கு 18 – 2 = 16 எடுத்துக் காட்டுகள் காட்டப்பட்டன காண்க.
சுட்டு எழுத்துகள் :
” அஇஉ அம்மூன்றும் சுட்டு ” (31)
அ இ உ என்ற மூன்று குற்றெழுத்துகளும் சுட்டெழுத்தாம்.
எ- டு: அந்த இந்த உந்த
அவ்வீடு இவ்வீடு உவ்வீடு
வினாவெழுத்துகள்:
” ஆஏஓ அம்மூன்றும் வினா ” – 32
ஆயின் பவணந்தியார் ஆஎஏஓயா என்பன வினா எழுத்தென்றார்.
எ- டு :
அவனா? எவன்? ஏது? மரமோ? யாவை?
(எ+கா: ரழ தவிர்ந்த எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம்வந்து மயங்கும்.)
பச்சை மாமலை போல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே அயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
(தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்)
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
— நூன்மரபு நிறைவு —