இலக்கண வகுப்புக -29
தொல்:சொல்: உரியியல்-8
சென்ற வகுப்பில் ‘ உரியியல்’ ஆரம்பிக்கப்பட்டது. இவ் வுரிச் சொற்கள் பற்றித் தொல்காப்பியர் கூறுமாற்றை நோக்குவோம்.
1
” உரிச்சொற் கிளவி விரிக்கும் காலை
இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினும் மெய்தடு மாறி
ஒருசொல் பலபொருட்டு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல் “
(297)
இ-ள்
உரிச் சொல்லானது இசை, குறிப்பு, பண்பு என்ற மூன்று பொருளிலும் தோன்றும்.
இசை என்பது– செய்யுளின் இசைவு, ஓசைநயம், சந்தம் போன்றன.
குறிப்பென்றது — மனத்தினால் குறித்துணரப்படுவன.
பண்பென்றது — பொறியால் உணரப்படும் குணம்.
பெயர்ச் சொல்லிடத்தும், வினைச் சொல்லிடத்தும் தமது உருபுகள் முன்பின் வருதலையே ‘ தடுமாறி ‘ என்றார்.
2
தொல்காப்பியர் தனது நூற்பாக்களினூடே குறிப்பிட்ட ‘ உரிச் சொற்கள் ‘ ஏறக்குறைய 128 எனக் கூறி விளக்கி யுள்ளார். அவையாவன இவை :-
உறு தவ. நனி உரு புரை
கெழு குரு ஏ. முழ. குழ. என்பனவும் பலவும் உரிச் சொற்களாகும்.
3
” உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொரு ளென்ப “
(299)
இ- ள்:
உறு தவ நனி என்பன மிகுதி ( அதிகம், பெரிய) என்னும் குறிப்புப் பொருள் உணர்த்தும் எ-று இது ஒரு பொருள் குறித்த பல சொல்.
எ-டு:
” அடக்க முடையா ரறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா — மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு ” ( மூதுரை- 16)
நனி உண்டான் — அதிகம் உண்டான்
சாலச் சிறந்தன — மிகவும் சிறந்தன
பல பொருள் குறித்த ஒரு சொல் —
எ-டு
கடி = கடிமணம், கடிவாள், கடிமனை, கடிமலர்
4
” பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே ” ( மகாகவி)
5
மேலும் ‘ உரிச் சொற்கள் ‘ பயின்று வரும் திருக்குறள்கள் பலவுள்ளன.
” கடிதோச்சி மெல்ல எறிக
நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர் “
(562)
” கல்லா தவரும் நனி நல்லர் கற்றார்முன்
செல்லா திருக்கப் பெறின்” (403)
” பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை ” ( 803)
” பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ” ( 972)
மேற்கண்ட குறள்களில் பயின்று வந்த உரிச் சொற்களின் பொருள் காண்போம் :
கடிதோச்சி — அளவிறந்து
நனிநல்லர் — மிக நல்லவர்
கெழுதகைமை — உடம்படும் இயல்பு
யான் — ஆல் என்றது ஆன் ஆகி யான் என்ற உரிச்
சொல்லாய் வந்தது.
6
சால – உரிச்சொல் ‘ அளவின் அதிகத்தைக் குறிக்கும்,
திருவாசகம்:
” பால் நினைந்தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ ….” ( பிடித்த பத்து)
உறு — உரிச்சொல் இங்கு பெரிய என்ற பொருளில் வந்தது,
” இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் ….”
( சம்பந்த ப் பெருமான்)
கடி — உரிச்சொல் இங்கு உறுதியான என்ற பொருளில் வந்தது,
” காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக ..”
( அப்பர் பெருமான்)
— இவ் வகுப்பு ( உரியியல்) நிறைவு —