இலக்கண வகுப்பு – 30, தொல் : சொல்:
இயல் – 9 ” எச்சவியல்”
தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திலே முதல் இயலான
‘கிளவியாக்கம் ‘ முதற் கொண்டு, ‘உரியியல்’ வரையான 8 இயல்களிலும் தொல்காப்பியர் சொல்லாது விட்டவற்றையும், அதாவது எஞ்சி நின்ற இலக்கணப் பொருளை ஒன்றாகத் தொகுத்து, அவற்றை எச்சங்கள் எனக் குறிப்பிட்டு, அவற்றை விளக்குகின்ற இந்த இயலை ‘எச்சவியல் ‘ எனப் பெயர் குறித்தார்.
இவ்வியலில் எச்சங்களுடன், செய்யுளுக்கான சொல், அவற்றின் இலக்கணம், செய்யுள் விகாரம், பொருள் கோடல் போன்ற விடயங்களும் கூறப் பட்டுள்ளன என அறிகிறோம்.
1 தலைச்சூத்திரம் யாது நுதலிற்று? நால்வகைச் சொற்களை நுதலிற்று “
“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் லென்று
அனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” (397)
இ-ள்:
இயற்சொல்லும், திரி சொல்லும், திசைச் சொல்லும், வட சொல்லும் என அத்துணையே செய்யுள் ஈட்டுதற்குரிய சொல்லாவன எ-று
இதற்குச் சேனாவரையர் உரை செய்கையில் “இந் நான்கு சொல்லுமே செய்யுட்குரியன, பிற பாடைச் சொல் உரிய வல்லவென்று வரையறுத்த வாறு” என்றதனைக் கருத்திற் கொள்க !
தொல்காப்பியர் ஏற்கனவே பெயரும் வினையும் எனச் சொற்கள் இரண்டு என்றும், அவற்றின் மருங்கில் இடை, உரி எனப் பெயரளவில் சூத்திரம் சொன்னவர், இங்கும் நான்கு சொற்களைக் கூறி, அவை ‘ செய்யுளுக்கு உரித்தானவை ‘ என்பதை உற்று நோக்க வேண்டும்.
இயற் சொல்லினுடைய பாகுபாடுகளே அந்நான்கு சொல்வகைகள் எனவறிக!
2
இயற்சொல்லாவது:
“அவற்றுள்; இயற்சொற் றாமே செந்தமிழ்
நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே” (398)
இ-ள்:
அந் நான்கனுள் இயற்சொல் என்று சொல்லப்பட்ட சொற்றாம், செந்தமிழ் நிலத்தும், கொடுந்தமிழ் நிலத்தும் தம்பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல்லாம் எ – று
எ-டு:
நிலம், நீர், சோறு, கூழ், பால், தயிர், மக்கள், தெங்கு, மா, கமுகு எனப் பலவாம்.
செந்தமிழ் நிலமாவது — செம்மையும் சீரும் கொண்ட, இலக்கண இலக்கியங்களால் செந்தமிழ் மொழி வழக்கிலுள்ள நிலப் பகுதியாகும்.
கொடுந்தமிழ் நிலமாவது — செந்தமிழ் நிலம் போலன்றி, அயன் மொழிகளும், பிற மொழிகளும் கலந்து திரிபடைந்த மொழியைப் பேசும் வழக்கிலுள்ள நிலப்பகுதி ஆகும்.
ஆக, திரிபு இல்லாமல் இயல்பினாலாய சொற்களே ‘ இயற்சொல் ‘ எனத் தெளிக!
3
இனி ‘ திரிசொல் ‘ யாது?
“ஒருபொருள் குறித்த வேறு சொல்லாகியும்
வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
இருபாற் றென்ப திரிசொற் கிளவி” (399)
இ-ள்:
ஒரு பொருளையே குறித்து வருகின்ற பல சொல்லும், பல பொருளைக் குறித்து வருகின்ற ஒரு சொல்லுமென்று திரி சொல் இருவகைத்தாம்
எ-று
எ-டு:
ஒரு பொருட் குறித்த பல/வேறு பெயர்க் குளவி —
வெற்பு, விலங்கல், விண்டு : மலை
வேறு பொருள் குறித்த
- பல – ஒரு சொல் — எகினம் : அன்னம், கவரிமா, புளிமா, நாய்
- மேலும்,
உந்தி : கொப்பூழ், தேர்த் தட்டு, கான்யாறு.
திரிதல் என்றால் உறுப்புத் திரிதலும், முழுவதும் திரிதலுமாம்.
4
அடுத்து, திசைச்சொல் பற்றி உரைக்கிறார்:
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி ” (400)
இ-ள்:
செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த 12 நிலத்தும் தான் குறித்த பொருள் விளக்கும் திசைச் சொல் எ-று
( தொல்காப்பியர் காலத்தே அவர் குறிப்பிட்ட 12 நிலங்களும், 12 ஆம் நூற்றாண்டில் தொல் காப்பியத்திற்கு உரை செய்த சேனாவரையர் கூறி 12 நிலங்களும் வெவ்வேறு பெயருடையன என உரைவல்லோர் உரைப்பர்.
இன்னோர் முடிவுகளின் படி, குமரியின் தென்கரையே அமைந்த பழந்தீபமும், கொல்லமும், கூபகமும், சிங்களமும், கொங்கணமும், துளுவும், குடகமும், குன்றகமும், கருநடமும், வடுகுவும், தெலிங்கும், கலிங்கும் ஆகியன 12 நிலங்களாகக் கொள்ளப்பட்டன எனவறிக)
எ-டு:
பசு/எருமை — பெற்றம்
தந்தை — அச்சன்
தாய் — தள்ளை
கிணறு — கேணி
விழா — பண்டிகை ( தெலுங்கு)
திறப்பு — சாவி ( போர்த்துக்
கேயம்)
காலணி ( மெட்டி) — கொலுசு — ( தெலுங்கு )
5
அடுத்து, வடசொல் பற்றிய விளக்கம்:
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (401)
இ-ள்:
வடசொற் கிளவியாவது, வடசொற்கே உரியதெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி, இருசார் மொழிக்கும் பொதுவான எழுத்தான் இயன்ற சொல்லாம் எ-று
எ-டு :
வாரி, மேரு, குங்குமம். மநு, — இவை அவ்வாறே வந்து தமிழில் வழங்கும் சொற்கள், இவை ‘ தற்சமம் ‘ எனப்படும்.
தவிர நேரே தமிழில் கலக்காமல், தமிழின் தனித் தன்மை கெடாது, தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட சொற்களுமுள. அவை ‘ தற்பவம் ‘ எனப்படும்.
பாடை, வருடம், கட்டம், இலக்குமி போன்றனவாம்.
6
இனி ‘ விகாரம் ‘ என்பது என்ன எனப் பார்ப்போம்;
நான்கு வகைச் சொற்களும், செய்யூளீட்டச் சொல் எனும் போது, அவை ‘ விகாரம் ‘ அடைகின்றன எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.
“அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை
வலிக்கும்வழி வலித்தலும்
மெலிக்கும்வழி மெலித்தலும்
விரிக்கும்வழி விரித்தலும்
தொகுக்கும்வழி தொகுத்தலும்
நீட்டும்வழி நீட்டலும்
குறுக்கும்வழி குறுக்கலும்
நாட்டல் வலிய என்மனார் புலவர் ” (403)
இ-ள்:
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்கு சொல்லையும் செய்யுளாகத் தொடுக்கும் போது, மெல்லினம் வல்லினமாதலும், வல்லினம் மெல்லினமாதலும், குறைவதை விரித்தலும், தொகுக்க வேண்டின் தொகுத்தலும், நீட்ட வேண்டின் நீட்டலும், குறிலினை நெடித்தலும் என விகாரம் அறுவகையாம். செய்யுளீட்ட வல்லார் இதை நிலை நாட்டுவர் எ-று
எ-டு:
குறுங்கை – குறுக்கை ( இது வலித்தல் விகாரம்)
மட்பாவை – மண்பாவை ( இது மெலித்தல் விகாரம்)
கொன்றைத்தார் – கொன்றையந்தார் ( இது விரித்தல் விகாரம்)
மழவரை ஓட்டிய முருகன் –
மழவரோட்டிய முருகன் ( இது தொகுத்தல் விகாரம்)
பச்சிலை – பாசிலை ( இது நீட்டல் விகாரம்)
தீயேன் – தீயென் /தியேன் ( இது குறுக்கல் விகாரம்)
— இவ் வகுப்பு நிறைவு —