Class 31

இலக்கண வகுப்பு – 31
தொல்:சொல்: இயல் 9 எச்சவியல்

1
எச்சவியலுள் ‘ பொருள் கோள் ‘ என்ற பகுதி முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். செய்யுளொன்றைப் புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகின்ற கருவியே இதுவாகும்.

கொள்வது கோள். அவ்வாறு கொள்வதே ‘ கொள்கை ‘ ஆனது. இவ்வாறு பொருள் கொள்ளும் முறைகள் நான்கு என்கிறார் தொல்காப்பியர்.

” நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவை நான்கென்ப மொழிபுணர் இயல்பே ” (404)

இ-ள்: இவை நான்கும் செய்யுளிடத்தே தம்முட் புணருமாறு இயல்புடைத்து எ- று

2
முதலில் ‘ நிரனிறைப் பொருள்கோள் ‘ பற்றி உரைக்கிறார்.

“அவற்றுள், நிரல்நிறை தானே வினையினும்
பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு
நிலைஇப் பொருள் வேறு நிலையல் ” (405)

இ-ள்:

அந்நான்கினுள் நிரனிறையாவது வினையானும், பெயரானும் ஆராயத் தோன்றி ச் சொல் வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம் எ-று

இதனூடே, நிரனிறைப் பொருள் கோளாவது, வினைச் சொல்லால் வருவதும், பெயர்ச் சொல்லாய் வருவதும் , அவ்விரு சொல்லால் வருவதும் என மூன்று வகையாம். ஆக வினைச் சொற்களையும், பெயர்ச் சொற்களையும் ஒரு நிரலாயும், அவை கொள்ளும் பொருளை மற்றுமொரு நிரலாயும் நிறுத்திப் பொருள் கொள்ளும் முறையே ‘ நிர னிறைப் பொருள் கோள் ‘ முறையாகும். copied

எ-டு:
வினை நிரனிறை :

” மாசு போகவும் காய்பசி நீங்கவும்
கடிபுனல் மூழ்கி அடிசில் கைதொட்டு “

இச் செய்யுளில்.

மாசு போக – வினை
காய்பசி நீங்க – வினை
கடிபுனல் மூழ்கி – வினை
இவ் வினைகளை உரிய பெயர்களுடன் நிரனிறை செய்ய;

” மாசு போகக் கடிபுனல் மூழ்கி, காய்பசி நீங்க அடிசில் கைதொட்டு ” என வந்தியையும்.

பெயர் நிரனிறை :
” கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி
மதிபவள முத்த முகம்வாய் முறுவல் பிடிபிணை மஞ்ஞை
நடை நோக்கும் சாயல் வடிவினளே வஞ்சி மகள் “
( யா/கா, மேற்கோள்)

இச் செய்யுளில் 9 பெயர்ச் சொற்கள் வந்தன. ஆதலான் இது ‘ பெயர் நிரனிறை “.

இப் பெயர்களை உரிய உரியவற்றுடனும், வினையோடும் நிரனிறை செய்ய, இப்படிப் பொருளுடன் அமையும்:

” நுசுப்பு கொடி, உண்கண் குவளை, மேனி கொட்டை, முகம் மதி, வாய் பவளம், முறுவல் முத்து, நடை பெண் யானை, நோக்கு பெண்மான், சாயல் மயில்,


— இவ்வளவும் ஒன்றாய் அமைந்த வடிவு கொண்டவளே வஞ்சி நாட்டுப் பெண் என்பதே பொருளாகும்.

3

அடுத்து ‘ சுண்ணப் பொருள்கோள் ‘

“சுண்ணம் தானே
பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர்
ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல் ” (406)

இ-ள்:

சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரைத் துணித்து, இணையும் வழியறிந்து சுட்டி இயற்றப்படுவதாம் எ-று copied

எ-டு:

” சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு — நிலையென்ப
கானக நாடன் சுனை “
( பழமொழி 400, சிந்தடி வெண்பா)

இதனைச் சுண்ண முறையிற் பொருள் கோட இவ்வாறு வரும் :

” சுரை மிதப்ப அம்மியாழ வரையனைய
யானைக்கு நிலை முயற்கு — நீத்து என்ப
கானக நாடன் சுனை “

சந்தனக் குழம்பு போல சிதறிப் பரவிக் கிடத்தலால், ‘ சுண்ணம் ‘ என்றார்.

ப-ள் :
( வரை – மலை. கானகநாடன் – காட்டை நாடாகவுடைய தலைவன்.
சுனை – மலையருவி, நீரூற்று)

4
இனி ‘ அடிமறிப் பொருள் கோள் “:

” அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே ” (407)

இ-ள்:

அடிமறிப் பொருள் கோளாவது, சீர் நின்றாங்கு நிற்ப, அடிகள் தத்த நிலையில் திரிந்து ஒன்ற, நிலைக் களத்து ஒன்று சென்று நிற்கும் எ-று ஆக எல்லாவடிகளும் எவ்விடமும் சென்று பொருந்திப் பொருள் கொள்ளும். copied

எ-டு:

“மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழி யான்வாழு மாறே ” ( குறுந்தொகை)

இது நாலடிச் செய்யுள்களுக்கே பெருமளவு பொருந்தி வரும்.

5
இனி ‘ மொழிமாற்றுப் பொருள் கோள் ‘

“மொழிமாற் றியற்கை சொல்நிலை மாற்றிப்
பொருளெதிர் இயைய முன்னும் பின்னும்
கொள்வழிக் கொளாஅல் ” (409)

இ-ள்:

மொழிமாற்றின் இயல்பானது, பொருள்எதிர் இயையுமாறு சொல் நிலையை மாற்றி,
முன்னும் பின்னும் கொள்ளும்வழி கொண்டு கொளுவுதலாம் எ-று

எ-டு;

“ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும்
பாரி பறம்பின்மேல் தண்ணுமை — காரி
விறன்முள்ளூர் வேங்கைவீ தான்நாணும்
தோளான் நிறனுள்ளூர் உள்ளது அலர் ” ( புறப்பாட்டு)

ப- ள்:

( பறம்பு – மலை. தண்ணுமை – முழவு, போர்
முரசு. காரி – மலையமான் திருமுடிக்காரி. முள்ளூர் – மலைப்பகுதி. வீ – பூக்கள்.
வேங்கை – மரம். நிறன் – நிறம். அலர் – பழிச்சொல்)

இதனை ‘ மொழிமாற்றுப் பொருள் ‘ கோட இவ்வாறமையும்:

” பாரி பறம்பின்மேல் தண்ணுமை தான்நாணும் தோளான்
நிறன் விறன்முள்ளூர் வேங்கை வீ நாணும்
உள்ளூர் அலர் ஆரிய மன்னர் பறையில் எழுந்தியம்பும் “

  • இவ் வகுப்பு நிறைவு —