Class 32

இலக்கண வகுப்பு – 32

தொல்:சொல்: இயல் 9 ‘எச்சவியல்’

இப்போது ‘ செய்யுள் ஒழிபு ‘ பற்றி நோக்குவோம். செய்யுளுக்குரிய சொல், செய்யுள் விகாரம், பொருள் கோள், வழக்கு முதலாயின செய்யுள் ஒழிபிலடங்குவன.

1
‘ அடுக்கி வரும் சொல் ‘

“இசைநிறை அசைநிலை பொருளோடு புணர்த லென்று
அவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே” (411)

இ-ள்:

இசை நிறையும், அசை நிலையும், பொருள் வேறுபாட்டோடு புணர்வதுமென ஒரு சொல்லடுக்கு மூவகையாம்.

  1. இசை நிறையடுக்கு
  2. அசைநிலையடுக்கு
  3. பொருளொடு புணரடுக்கு

எ-டு:
ஏ ஏ ஏ ஏ , ஓ ஓ ஓ ஓ, ஆ ஆ ஆ ஆ– இசைநிறையடுக்கு
மற்றோ மற்றோ, அன்றே அன்றே — அசைநிலையடுக்கு
பாம்பு பாம்பு, போம் போம்,
உண்டு உண்டு — பொருளொடு புணரடுக்கு.

அடுக்குத் தொடரைப் பிரித்தால் தனிச்சொல் பொருள் தரும். இரட்டைக் கிளவி பொருள் தரா. 4 தடவைகளுக்கு மேல் அடுக்கக் கூடாது.
மதுரகிரித் திருப்புகழ்:

” வந்து வந்து வித்தூறி என்றனுடல்
வெந்து வெந்து விட்டோட
நொந்துயிரும் …”

திருவிசைப்பாவும் ” கற்றவர் விரும்பும்… கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளங் குளிர….” எனப்பாடுகிறது.

2
” தொகை மொழிகள் “
தொகை மொழிகள் ஆறுவகை என்கிறார்.

“வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகை
யென்று அவ்வா றென்ப தொகைமொழி நிலையே” (412)

இ-ள்:
இங்கு 6 தொகை மொழிகளைச் சுட்டிய தொல்காப்பியர், தனியான நூற்பாக்கள் மூலமாகவும் விளக்கியுள்ளார்.

தொகை = தொக்கி நிற்பது தொகையாம். உருபு தோன்றா நின்று பொருளுணர்த்துவது.

— வேற்றுமைத் தொகை, அவ்வேற்றுமை உருபு தொடர்பொருளுணர்த்தி நிற்கும்.

எ-டு:
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை என்பதால், அது தொகா. ஆக 2 – 7 வரையான வேற்றுமை உருபுகள் தொக்கி நிற்கும்.

2 ஆம் வேற்றுமை–
நிலம் கடந்தான். இது தொகை, இதை விரிக்க,
நிலத்தைக் கடந்தான் எப வரும்.

3 ஆம் வேற்றுமை–
இராமன் மூவர் – இது தொகை. இதை விரிக்க,
இராமனொடு மூவர்

4 ஆம் வேற்றுமை —
கரும்பு வேலி – இது தொகை, இதை விரிக்க,
கரும்புக்கு வேலி.

5 ஆம் வேற்றுமைத் தொகை–
மலைவீழருவி – இது தொகை, விரிக்க,
மலையின் வீழருவி.

6 ஆம் வேற்றுமை–
வள்ளுவன் குறள்- இது தொகை, விரிக்க,
வள்ளுவனது குறள்.

7 ஆம் வேற்றுமைத் தொகை–
தைப்பூசம் – இது தொகை, விரிக்க, தைக்கண் பூசம்.

ஆக,
சொற்களிடையே வேற்றுமை உருபுகள் மறைந்து நின்று வேற்றுமைப் பொருளை உணர்த்துவது ‘ வேற்றுமைத் தொகை ‘.

வேற்றுமை உருபு வெளிப்
பட்டு நிற்பது ‘ வேற்றுமை
தொடர் ‘
தொக்க நிற்பது தொகைநிலை, வெளிப்பட்டு நிற்பது தொகாநிலை என்பதும் வழக்காம்.விரிந்த நிலை

3
உவமத் தொகை:

உவமைத்தொகை எனினும் சரி.

” உவமத் தொகையே உவம இயல ” (414)

இ-ள்:

உவமத் தொகையானது உவமவுருபு தொடர்ப் பொருள் போலப் பொருளுணர்த்தும்

எ-டு:
புலி மறவன் — இது உவமத் தொகை.
புலியன்ன மறவன் — இது உவம உருபுத் தொடர்.

மயின் மாதர் — இது உவமத் தொகை.
மயிலொத்த மாதர் — இது உவமவுருபுத் தொடர். இங்கு வரும் உவமவுருபுகள் ‘ இடைச் சொற்கள் ‘ எனவுணர்க.

உவமவுருபுகளாவன:
போல, போன்ற, போலும், ஒப்ப, புரைய, மான, கடுப்ப, உறழ, அன்ன, இன்ன, ஒத்த எனப் பற்பல.

ஆக ஓர் உவமத் தொடரில் உவமானம், உவமேயம், உவமவுருபு என்பன அடங்கும்.

” குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
…”
” பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச் செங்கண் …”

  1. ‘ வினைத்தொகை’

” வினையின் தொகுதி காலத் தியலும் ” (415)

இ-ள்:
வினைத் தொகையானது காலத்தின்கண் நிகழும் எ-று

வினையை உணர்த்தும் இத் தொகையானது மூன்று காலத்திற்கும் வரும். இங்கு வினையின் காலம் மறைந்து நின்றதால் ‘ வினைத் தொகை ‘ ஆனது

எ-டு:

கொல்யானை, ஆடரங்கு, அரிவாள், சுடுசோறு எனப்பல.

இங்கு வினையும் பெயரும் இணைந்து வந்தமை நோக்குக. வினைத் தொகையைப் பிரித்துப் பொருள் கொள்ளலாகாது.

” ஆராத இன்பம் அருளும் மலை போற்றி… ” ( திருவாசகம்)

” இல்நுழை கதிரின் துன்னணுப் புரைய ..”

” விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க …”

” செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம் ” ( சம்பந்தர்)

5
பண்புத்தொகை:

“வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையி னென்று
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி
இன்னது இதுவென வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின் தொகையே ” (416)

இ-ள்:

வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும், அவை போல்வன பிறவுமாகிய குணத்தை நுதலி, பின் தொக்கவழிக் குணச் சொற் குணமுடையதனை உணர்த்துவதனால், இன்னது இதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து, இரு சொல்லும் ஒரு பொருளின் மேல் வரும் இயல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத் தொகையாம்
எ-று

பண்புத் தொகையும் வினைத்தொகை போலப் பிரிபடாவாம்.

எ-டு:

வண்ணப் பண்புத் தொகை– கருங்குதிரை

வடிவுப் பண்புத்தொகை–
வட்டப்பலகை

அளவுப் பண்புத்தொகை–
நெடுங்கோல்

சுவைப் பண்புத்தொகை–
தீங்கரும்பு

  • இவ்வகுப்பு நிறைவு —