இலக்கண வகுப்பு – 33
தொல்:சொல்: இயல் 9 – எச்சவியல்
1
தொகைகளின் வரிசையில் ‘உம்மைத் தொகை’ பற்றி அறிவோம்:
“இருபெயர் பல்பெயர் அளவின் பெயரே
எண்ணியற் பெயரேநிறைப்பெயர்க் கிளவி
எண்ணின் பெயரோடு அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலத்தே உம்மைத் தொகையே ” (417)
இ-ள்:
இருபெயர் உம்மை, பல்பெயர் உம்மை, அளவுப் பெயர் உம்மை, எண்ணியற் பெயர் உம்மை, நிறைப்பெயர் உம்மை, எண்ணுப் பெயர் உம்மை ஆகிய ஆறுவகைச் சொற்றிரளும் ‘உம்மைத் தொகையாம் ‘ எ-று
எ-டு:
- இருபெயர் உம்மைத் தொகை– சிவசக்தி. சிவமும் சக்தியும்.
- பல்பெயர் உம்மைத் தொகை –புலிவிற்கெண்டை. புலியும் வில்லும் கெண்டையும்.
- அளவுப் பெயர் உம்மைத் தொகை — தூணிப்பதக்கு- தூணியும் பதக்கும். நாழியுரி – நாழியும் உரியும்.
- எண்ணியற் பெயர் உம்மைத் தொகை — அறுபத்திமூவர் – அறுபதும் மூவரும்.
முப்பத்து முக்கோடி தேவர் – மூன்று பத்தும் மூன்றும் சேர்ந்த கோடியும். - நிறைப் பெயர் உம்மைத் தொகை — தொடியரை – தொடியும் அரையும்.
கிலோகிராம் – கிலோவும் கிராமும். - எண்ணுப் பெயர் உம்மைத் தொகை — பதினைந்து, பத்தும் ஐந்தும்.
எ- டு: ( எண்ணும்மை)
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் — நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் ‘ ( ஔவை)
“கண்காட்டு நுதலானும்கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானு ம் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே! ” ( ஞானசம்பந்தர்)
2
இனி ‘அன்மொழித் தொகை’ பற்றி நோக்குவாம் :
“பண்பு தொகவரூஉம் கிளவியானும்
உம்மை தொக்க பெயர்வயி னானும்
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்று
நின்றியலும் அன்மொழித் தொகையே” (418)
இ-ள்:
பண்புச் சொல் தொகும் சொல்லினும், உம்மை தொக்க பெயர்க் கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கள் நின்று நடக்கும் அன்மொழித் தொகை எ-று
எ-டு:
வெள்ளாடை — இது பண்புத் தொகை. இது விரியும்போது அன்மொழித் தொகையாகும். ‘ வெள்ளாடை உடுத்தாள் ‘
அகரவீறு — இது பண்புத் தொகை, ‘ அகரமான ஈற்றையுடைய சொல் ‘ என விரித்ததும் அது அன்மொழித்தொகை.
பொற்றொடி — வேற்றுமைத் தொகை, விரிக்க ‘ பொற்றொடி வந்தாள் ‘ எனும் போது அன்மொழித்தொகை.
இவற்றை முறையே,
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை,
வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்று அழைக்கப்படும்.
“உவமத்தொகை நிலைக்களத்தும், வினைத்தொகை நிலைக் களத்தும் அன்மொழித் தொகை பிறப்பது சிறுபான்மையே என்கிறார் சேனாவரையர்.
3 இனி வினைமுற்றின் வகைகளையும், அதன் இயல்புகளையும் காட்டுகிறார்.
முற்றுச் சொல்லிற்கு இலக்கணம் முற்றி நிற்றல் என்பர் சேனாவரையர்.
“இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச்
சிறப்புடை மரபின் அம்முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம்மூ விடத்தான் வினையினும் குறிப்பினும்
மெய்ம்மையானும் இவ்விரண் டாகும்
அவ் வாறென்ப முற்றியன் மொழியே” (427)
இ-ள்:
முற்றுச் சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் முக்காலமும், தன்மை முன்னிலை படர்க்கை எனும் மூன்றிடத்தும், உயர்திணை அஃறிணை இருதிணைப் பொதுவுமாகிய பொருள் தோறும், வினையாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அறுவகைச் சொல்லாம் எ-று
எ-டு:
தன்மை — நான் வந்தேன் – இறப்பு
நான் வருகிறேன் – நிகழ்வு
நான் வருவேன் – எதிர்வு.
இவ்வாறே முன்னிலை, படர்க்கை இடங்களுக்கும் கண்டு கொள்க.
மேலும் வினை முற்றானது, தெரிநிலை வினை முற்று, குறிப்பு வினை முற்று, ஏவல் வினைமுற்று, வியங்கொள் வினை முற்று என நான்காம் என்பதை மனத்தே நிறுத்துக!
4
‘ எச்சச் சொற்கள் ‘ அதன் பாகுபாடுகளை அடுத்து உரைக்கிறார்.
“பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீ ரைந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி” (430)
இ-ள்:
பிரிநிலை எச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம் என, சொல் குறிப்பு இசை எனச் சொல்லப்பட்ட பத்தும் ‘ எஞ்சு பொருட் கிளவியாம் ‘ எ-று
இவற்றை ஒவ்வொன்றாக அடுத்த வகுப்பில் கற்போம்!
- வகுப்பு 33 நிறைவு –