இலக்கணத் தனிப் பொருள் வகுப்பு – 2, 29-7-2026
‘பதம்’
சென்ற வகுப்பிலே பகுபதம், பகாப்பதம் என்பன பற்றியும், பகுபதத்தின் உறுப்புகள் 6 என்றும், அவையாவன:
பகுதி, விகுதி, இடை நிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகுமெனவும், இவற்றில் பகுதி, விகுதி, இடைநிலை பற்றிய விளக்கங்களையும் பார்த்தோம்.
1
சாரியை :
பகுபதத்தில் பெரும்பாலும் இடை நிலை, விகுதி ஆகியவற்றிற்கு இடையிலும், சிறுபான்மை பிற இடங்களிலும் வரும் உறுப்பாகும். இது தனியாகப் பொருள் தராது. பகுபதங்களில் சாரியை வரவேண்டும் என்ற கட்டாயமில்லை.
எ-டு:
உண்டனன் — உண்+ட்+அன்+அன்.
இங்கு ‘ட்’ எனும் இடை நிலைக்கும், ஈற்றிலுள்ள ‘ அன்’ எனும் விகுதிக்கும் இடையில் வந்த ‘அன்’ என்பதே ‘ சாரியை ‘ எனப்படும்.
2
சந்தி :
ஒரு பகுபதத்தில் அமைந்துள்ள பகுதியையும், இடைநிலை, விகுதி முதலியவற்றையும் இணைக்கின்ற உறுப்பே
‘சந்தி’ எனப்படும். சந்தி பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும். சிறுபான்மை வேறிடங்களிலும் வரலாம். சந்தி வரத்தான் வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
எ-டு:
படித்தான் – படி+த்+த்+ஆன். இங்கு படி யை அடுத்து வந்த ‘த்’ சந்தியாகும். இது ஏனைய உறுப்புகளைப் பகுதியோடு இணைப்பதைக் காண்க.
3
விகாரம்-
பகுதி, சந்தி ஆகிய உறுப்புகளில் உண்டாகும் மாற்றம் ‘விகாரம்’ எனப் படும். விகாரத்திற்கெனத் தனியான உறுப்பு இல்லை.
எ-டு:
கண்டான் – கண்+ட்+ஆன்
இதுவே காண்+ட்+ஆன் என்று வருதலே சரியானதாகும். பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாகவே இருக்கும். ஆக மூன்று காலங்களுக்கும் ‘காண்’ என்ற ஒன்றே பகுதியாக இருக்க வேண்டும். இதுவே ‘ விகாரம் ‘ ஆகும்.
எ-டு:
நடந்தான் – நட+த்(ந்) + த்+ ஆன். இங்கு பகுதியை அடுத்துள்ள ‘த்’ சந்தியாகும். இச் சந்தியைத் திரிபு செய்யாது எடுத்தால்
‘ நடத்தான் ‘ என்றே வரும்.
ஆனால் ‘ நடந்தான்’ என்பதே சொல் ஆகையினால், ‘த்’ என்ற
சந்தி, ‘ந்’ எனத் திரிந்து விகாரமடைந்துள்ளது.
இதே போல ‘ வந்தாள் ‘ :
வா+த்(ந்) +த்+ஆள் எனும் போதும், ‘த்’ ‘ந்’ ஆகவும், ‘வ’ ‘வா’ ஆகவும் விகாரமடைந்தன கண்டு கொள்க.
விகாரங்கள் மூன்று வகை:
தோன்றல் விகாரம்–விகாரம்
ஒரு சொல்லில் புதியதோர் எழுத்து தோன்றுதல்:
பூ+கொடி = பூங்கொடி
திரிதல் விகாரம்:
ஓரெழுத்து வேறோர் எழுத்தாகத் திரிதல்
கல்+சிலை = கற்சிலை
கெடுதல் விகாரம்:
ஓரெழுத்து இல்லாது கெடுதல்
மரம்+வேர்= மரவேர்
-தனிப்பொருள் வகுப்பு நிறைந்தது –