வகுப்பு 37, 05-08-2026
தமிழ் யாப்பிலக்கண வகுப்பு — 1.
தொல்: பொருளதிகாரம் -இயல் 7 ‘உவமயியல்’
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்கள் கொண்டது. இம் மூன்றில் எழுத்ததிகாரம் எழுத்துகளின் இலக்கணங்களையும், பி றப்பிலங்கணங்களையும்,
புணர்ச்சி இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.
சொல்லதிகாரமானது சொல் தொடர் இலக்கணங்களையும், தனிச் சொல் இலக்கணங்களையும், விடுபட்ட இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.
பொருளதிகாரமானது அகத்திணை இலக்கணங்களையும், புறத்திணை இலக்கணங்களையும், யாப்பியல் இலக்கணங்களையும் எடுத்து விளக்குவதாகும்.
தமிழ் யாப்பிலக்கணம் அகத்தியத்திலேயே ஆரம்பித்து விட்டது. ஆயின் அவை தமிழர்தம் கரங்களிற் கிடைக்காத காரணத்தால், தொல்காப்பியமே யாப்பிலக்கணத்துக்குத் தோற்றுவாய் ஆயிற்று.
பின்னால் தோன்றிய யாப்பிலக்கண நூல்களுக்கெல்லாம் தொல்காப்பியமே மூல நூலானது என்பர் யாப்பிலக்கணகாரர்.
அவ்வகையில் பொருளதிகாரத்தில் சொல்லப்பட்ட ஏழாம் இயலான உவமயியலும், எட்டாம் இயலான செய்யுளியலும் இவ்வகுப்புகளில் கற்றலுக்கு எடுத்துள்ளேன்.
1
உவமயியல்:
ஆதிகாலத்தே தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்ற ‘ மூவிலக்கணம் ‘ என வழங்கியது.
பிற்காலத்தே யாப்பிலக்கணம் வளர்ச்சி பெறவே, ‘ஐந்திலக்கணம்’ ஆனது. அவை:
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவே ஐந்திலக்கணமாகும்.
ஆயின் தொல்காப்பியர் யாப்பு, அணி இரண்டையும் பொருளதிகாரத்திலேயே விளக்கியுள்ளதால், அவரே ‘ஐந்திலக் கணத்தின் ‘ தந்தை என்பர் சான்றோர்.
2
உவமை,உவமம் ஒரு பொருள் குறித்தன. ஒரு பொருளை அறியாத ஒருவனுக்கு அதனை அறிவிக்குங்கால், அதனோடு ஒத்த வேறொரு பொருளைக் காட்டி, ‘ இது போலும் இது ‘ எனக் கூறுவதே
‘ உவமை/உவமம்’ ஆகும்.
“வினைபயன் மெய்யுரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமத் தோற்றம் ” ( 272)
இ-ள்:
தொழிலும், பயனும், வடிவும், வண்ணமும் எனும் நான்கு கூறுபட வரும் உவமத் தோற்றம்” எ-று
எ-டு:
புலி போலும் மறவன் — இது வினையுவமை (பாய்தல்)
மாரியன்ன கை — பயனுவமை ( பயன்பாடு)
துடிபோலும் இடை — வடியுவமை ( வடிவம்/உருவம்)
பவளம் போலும் வாய் — வண்ணவுவமை (நிறம்)
3
உவமமும், உவமிக்கப்படும் பொருளும் ஒத்து வருதல் வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.
“உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்” (279)
எ-டு:
‘மயிற்றோகை போலும் கூந்தல்’ என்பது உலகத்தார் ஏற்றுக் கொண்டது.’ காக்கைச் சிறகன்ன கருமயிர் ‘ என்பது உலகத்தார் ஏற்றுக் கொள்ளாதது.
‘புலி போலப் பாய்ந்தான் ‘ , பூனை போலப் பாய்ந்தான் ‘ என்பனவும் இவ்வாறே கொள்க!
4
இனி, உவமை உருபுகள் பற்றி உரைக்கிறார்.
“அவைதாம்;
அன்ன வேய்ப்ப வுறழ வொப்ப
வென்ன மான வென்றவை எனாஅ
வொன்ற வொடுங்க வொட்ட வாங்க
வென்ற வியப்ப வென்றவை எனாஅ
வெள்ள விழைய விறப்ப நிகர்ப்பக்
கள்ளக் கடுப்ப வாங்கவை எனாஅ
காய்ப்ப மதிப்பத் தகைய மருள
மாற்ற மறுப்ப வாங்கவை எனாஅப்
புல்லப் பொருவப் பொற்பப் போல
வெல்ல வீழ வாங்கவை எனாஅ
நாட நளிய நடுங்க நந்த
வோடப் புரைய என்றவை எனாஅ
வாறா றவையு மன்ன பிறவுங்
கூறுங் காலைப் பல் குறிப் பினவே ” ( 282)
இ-ள்:
இவை எண்ணப்பட்ட 36 சொற்களும், இவை போல்வன பிறவும் வழக்கிடத்தும், செய்யுளிடத்தும் வேறுபடு குறிப்பினவாகி வரும் எ-று
இவையனைத்தும் தொழில், பயன், வடிவு, வண்ணம் ஆகியனவாய்த்
தனித்தனி வரும். ஆக
36×4 = 144 என வரும்.
5
மேற்படு நான்கு வகை உவமங்களும் எட்டாகியும் வருமாம்.
“நாலிரண் டாகும் பாலுமா ருண்டே” ( 289)
இ-ள்:
நால்வகையாய் நின்று பொருள் தந்த உவமையானது, தொகை நான்கும், அவற்றின் விரி நான்குமென எட்டாகும் எ–று
எ-டு:
‘ புலிப் பாய்ச்சல் – இது உவமத் தொகை
புலியன்ன பாய்ச்சல் – இது உவமவிரி
மழைவண்கை – இது உவமத் தொகை மழையன்ன வண்கை – இது உவமவிரி
வேய்த்தோள் – இது உவமத் தொகை
வேயன்ன தோள் – இது உவமவிரி
பவளவாய் – இது உவமத் தொகை
பவளமன்ன வாய் – இது உவமவிரி
இவை 8 ஆகின காண்க!
• வகுப்பு 37 நிறைவு –