Class 38

வகுப்பு -38; யா-2
தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 2. தொல்:பொருள்: உவமவியல்; 19-08-2026

1
அடுத்து ‘ உள்ளுறை உவமம் ‘. வெளிப்படையாக உவமங்களைக் கூறியமைந்த ஒரு செய்யுளுள்ளே அதற்கான பொருள் உறைந்து -மறைந்து- கிடப்பின் அது ‘உள்ளுறை உவமம் ‘ எனப்படும்.இது பெரும்பான்மையாக அகத்திணைப் பாடல்களிலேயே பயன்படுத்தப்படும். ஆதலால் தொல்காப்பியர் அகத்திணை இயலிலேயே இதற்கு விளக்கம் தருகிறார். அரிமா நோக்காக, அகத்திணை இயலை நோக்க, அங்கு நூற்பா 51 ல் இதைக் குறிக்கிறார்.

“உள்ளுறுத்து இதனோடு
ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்தும் உரைப்பதே உள்ளுறை உவமம்” (51)

இ-ள்:
உள்ளடக்கிக் கூறப்பட்ட கருப்பொருளை ‘கருதிய பொருள் இதனுடன் ஒன்றுபட்டு முடிக’ என்று உள்ளடக்கிக் கூறுவதே
‘ உள்ளுறை உவமமாம்’ எ-று

இது வினை, பயன், மெய், உரு இவற்றாலன்றிப் பொருள் உவமையாற் கொள்ளப்படுவதாம்.

எ-டு: (தண்டியலங்கார உதாரண வெண்பா)
“வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும் — நிறைமதுசேர்ந்து
உண்டாடுந் தன்முகத்தே
செவ்வி உடையதோர்
வண்டாமரை பிரிந்த வண்டு “

இங்கு உவமை உருபுகள் வரவில்லை. உவமைகள் மாத்திரமே காட்டப்பட்டன.
ஆயின் பொருள் உள்ளுறையாகவே உள்ளது. இது ‘ உள்ளுறை உவமம்’ ஆகும். இதில் ” ஆடவர் வண்டு போன்றவர்கள் ” என்பதே உள்ளுறை உவமப் பொருளாகும்.

— உவமவியல் நிறைவு —

( பொருளதிகாரம், இயல் – 8, ‘ செய்யுளியல் ‘ஆரம்பம்

இது செய்யுளின் இலக்கணம் கூறுவதால் ‘ செய்யுளியல்’ ஆயிற்று.

பாயிரத்திலே ” வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ” எனக் கண்டவாறே ஈண்டு செய்யுள் பற்றி உரைக்கின்றார்.

செய்யுள் = செய்ய பொருளை உள்ளே கொண்டது எனப் பொருள்படும்.
மேலும்
“யாப்பிலக்கணத்திற்கு உட்பட்டு, எழுத்து அசை சீர், தளை, அடி, தொடை ஆகிய 6 உறுப்புகளைக் கொண்டு, பொருள் நிறைவோடு ஆக்கப்படும்
பாட்டு ‘ செய்யுள் ‘ எனப்பட்டது.

பாட்டு, கவிதை, பா, காவியம், நூல், இசை யுரை, சிந்து, தூக்கு எனப் பல பெயர்களால் வழங்கும்.

அவ்வகைச் செய்யுளானது 34 உறுப்புகள் கொண்டமையும் எனத் தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

“மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ
யாத்த சீரே அடியாப்பு எனாஅ
மரபே தூக்கே தொடை வகை எனாஅ
நோக்கே பாவே அளவியல் எனாஅ
திணையே கைகோள் கூற்றுவகை எனாஅக்
கேட்போர் களனே காலவகை எனாஅப்
பயனே மெய்ப்பாடு எச்சவகை எனாஅ
முன்னம் பொருளே துறைவகை எனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
ஆறு தலையிட்ட அந்நா லைந்தும் …” ( 310)

இ-ள்:
மாத்திரை முதல் யாப்பியல் வரை 26 என்றும், அம்மை முதல் இழை வரை 8 என்றும், ஆக 34 என்றும் காட்டுகிறார். நூற்பாவினூடே அவற்றைக் கண்டு கொள்க!

இவ்வுறுப்புகளின் முக்கியமானவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம்:

2
அசை வகைகள்:
“குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசிற் பெயரே” ( 312)

இ-ள்:
குறிலும் நெடிலும் தனித்து வந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிலின் பின்னர் நெடில் இணைந்து வந்தும், அவை ஒற்றடுத்தும் வரும் முறையினாலே ‘ நேர் நிரை ‘ ஆகலினால், நேரசையும் நிரையசையும் என்றாம் எ-று

கண்டராதித்தர் திருவிசைப்பா:

” சீரான் மல்கு தில்லைச் செம்பொ னம்பலத் தாழி
தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் ” என்ற அடியிலே ‘ கோழி வேந்தன் ‘ என்றதை உதாரண வாய்பாடாகக் கொள்வர்.

கோ = நெடில், ழி = குறில். இவை தனித்து வந்த நேரசைகள்.

வேந் = வே ( நெடில்) ஒற்றடுத்து வந்த நேரசை

தன் = த ( குறில்) ஒற்றடுத்து வந்த நேரசை

இவை நிரையசைகள் :-

நெறி = இது இணைக் குறில் – நிரையசை

சுறா = இது குறிலும் நெடிலும் இணைந்து வந்த நிரையசை

நிறம் = இது ஒற்றடுத்து வந்த நிரையசை

3
மேலும் இருவகை அசைகளைத் தொல்காப்பியர் விளக்குகிறார்.

“இருவகை உகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப” ( 319)

இ-ள்:
குற்றுகரம், முற்றுகரம் ஆகிய இருவகை உகரங்களும் வருநிலைக் கண், அவை நேர்பு நிரைபு எனப் பெயர் பெறும். ( நேர்பசை, நிரைபசை)

எ-டு:
காது, காற்று, கன்று, காவு, சார்பு, கல்லு — இவை முற்றுகர நேர்பசைகள்.

வரகு, அரக்கு, பனாட்டு, கதவு, புணர்வு, வினாவு — இவை குற்றுகர நிரைபசைகள்.

( ஒரு நுட்பம் — நேர், நிரை, நேர்பு, நிரை என்பன தமக்குத் தாமே உதாரணங்களாம்)

4
” இயலசை முதலிரண்டு ஏனைய வுரியசை “

இ-ள்:
முதலில் கூறப்பெற்ற நேரசைக்கும், நிரையசைக்கும் ‘ இயலசை’ என்றும், பின்னுரைத்த நேர்பசை க்கும், நிரைபசைக்கும்
‘ உரியசை ‘ எனவும் பெயராம் எ-று

  • யாப்பிலாக்கண வகுப்பு 2 நிறைவு –

Quiz-38 – அசை பிரித்தல் – பயிற்சி1

Tamil Grammar

Quiz 38

1 / 10

வினா1
ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன?  ஐகாரம் சொல்லில் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை, சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவோடு குறைந்து ஒலிக்கும். (சரி/தவறு)

2 / 10

வினா2:

‘மெய்ம்மைகுன்றா‘ என்ற சொல்லிலுள்ள ‘மை‘ எவ்வகை எழுத்து?

3 / 10

வினா3: ‘கைத்தலம்‘ என்ற சொல்லிலுள்ள ‘கை‘ எவ்வகை எழுத்து?

4 / 10

வினா4: “குளிரிள வளரொளி வனமுலை இணையவை குலவலின்” என்ற அடியில்
‘இணையவை‘ என்ற சொல்லிலுள்ள ணை  எவ்வகை எழுத்து?

5 / 10

வினா5: “வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடை” என்ற அடியிலுள்ள ‘வானைக்காவில்’ என்ற சொல்லிலுள்ள ‘னை‘ எவ்வகை எழுத்து?

6 / 10

வினா6: அசை வகைகள்:
“குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசிற் பெயரே” (312)

‘மெய்ம்மையே’ என்ற சீருக்கு அசைபிரித்தெழுதுக.

7 / 10

வினா 7:  “தளிருந் திருமேனித் தையல் பாகமாய்”  என்ற அடியிலுள்ள சீர்களின்  அசையை வகைப்படுத்துக.

8 / 10

வினா8: “பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும்  பொங்கரவம்” என்ற அடியிலுள்ள சீர்களின்  அசையை வகைப்படுத்துக.

9 / 10

வினா 9: “குளிரிள வளரொளி வனமுலை இணையவை குலவலின்”  என்ற அடியிலுள்ள சீர்களின்  அசையை வகைப்படுத்துக.

10 / 10

வினா 10: “மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே”  என்ற அடியிலுள்ள சீர்களின்  அசையை வகைப்படுத்துக.

Your score is

The average score is 71%

0%

For YouTube Link, Please Click here

Download the Class 38 PowerPoint presentation