Class 42

தமிழ் யாப்பிலக்கண வகுப்பு-5. தொல்: பொருள்: 8. செய்யுளியல்

சென்ற வகுப்பில் சீர்களும், சீர்களால் அமைந்த அடிகளும், அவ்வடிகளின் வகைகளும், அதன் எடுத்துக் காட்டுகளும் பார்த்தோம்.

அடுத்து ‘ யாப்பு ‘ பற்றிப் பார்ப்போம்.

1

“எழுத்து முதலா வீண்டிய அடியிற்
குறித்த பொருளை முடிய நாட்டல்
யாப்பென மொழிப யாப்பறி புலவர்”( 390)

இ-ள்:

எழுத்து முதலாக அசை, சீர், அடி எனவுரைக்கப் பட்ட பொருள்களை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றுக்கு இலக்கணங்களை விளக்கியுரைக்கும் இயலே ‘ யாப்பிலக்கணம் ‘ ஆகும்.

2
இந்த யாப்பின் பகுதிகள் இவை:

“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கத முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி
னாற் பெயரெல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர் ” (391)

இ-ள்:

பாட்டும், உரையும், நூலும், வாய்மொழியும், பிசியும், அங்கதமும், முது சொல்லும் என்ற ஏழும், செய்யுளின் பெயரே தனக்குப் பெயராக உடையது ” யாப்பு ” என்பதுடன், வளமான புகழ்மிக்க மூவேந்தர் நாட்டார் வழிப்பட்டதே அவ் யாப்பு என்றும் புலவர் கூறுவர் எ-று

இவையேழும் மரபு வழியிலான யாப்பின் பகுதிகளாம்.

பாட்டு — பாடல்
உரை — பேச்சு
நூல் — நூல் – புத்தக – வகைகள்
வாய்மொழி — மந்திர வகைகள்
பிசி — விடுகதைகள்
அங்கதம் — வசைப்பாடல்
முதுசொல் — பழமொழிகள்

3

” ஓசை ” என்பது என்ன? என்பதை நூற்பாக்கள் 393 — 397 வரை விளக்குகிறார்.

அகவலும் ஆசிரியமும் ஒன்று இவற்றிற்குரிய ஓசை ‘அகவலோசை’
( மயிலின் அகவலோசை) இவ்வோசை களம் பாடவும், போர் பாடவும், மாறுபட்டுப் பாடவும், பல் தொழிலர் பாடவும் பயன்
படும். அகவுதல் = கூவியழைத்தல் ( நூற்பா 393)

செப்பலோசை வெண்பாவுக்குரியது. ஒருவர்க்கொருவர் இயல்பாக உரையாடும் ஓசையை ஒத்தது. ( 394)

கலிப்பாவிற்குத் ‘துள்ளலோசை’. மான் துள்ளல். (395)

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசை. சீர் தோறும் தூங்குமோசை கொள்ளும். தொங்கும் ஊசற் கயிற்றின் அசைவை ஒக்கும். ( 396)

மருட்பாவுக்குத் தனியோசை இல்லை (397)

மேலும் இவ்வோசைகளின் ஏற்றமும் உயர்வும் ‘ தூக்கு ‘ எனப்படும். இசை பண் வேறு இந்த ஓசை வேறென்றுணர்க. இங்கு ஓசை என்றது குரலோசையின் ஏற்றத் தாழ்வு மட்டுமே!

4

அடுத்து ‘ தொடை வகைகள் ‘ பற்றி உரைக்கிறார். சிறப்பு நோக்கி நால்வகைகளை முதலில் சொல்கிறார்.

” மோனை யெதுகை முரணே யியைபென
நானெறி மரபின தொடை வகை என்ப ” (400)

இ-ள்:

மோனைத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, இயைபுத் தொடை எனத் தொடைகள் நால்வகை.

தொடுப்பதனால் தொடையானது. ஒரு செய்யுளில் எழுத்து, அசை, சீர், தளை என்பவற்றை ஒன்றாக, ஓரடியில் தொடுப்பதனால் ‘ தொடை’ ஆயிற்று. மலர்களைத் தொடுப்பதால் மலர்த்தொடை ஆனது.

சுவாமி விபுலானந்தர் பாடுகிறார்:

“காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?

காப்பவிழ்ந்த மலருமல்ல
கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பிய கைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது “

5

மேலும் சிறப்பாற் சிறிது குறைந்த தொடைகள் நான்கைக் கூறி மொத்தமாகத் தொடைகள் 8 என்கிறார்,

அளபெடைத்தொடை, பொழிப்புத்தொடை, ஒரூஉத்தொடை, செந்தொடை என்பன அவை.

6

இப்போது முதலாவதாக
‘ மோனைத்தொடை ‘ அமையுமாறு காண்போம்:

“அடிதொறும் தலையெழுத் தொப்பது மோனை ” ( 404)

இ-ள்:

அடிதொறும் முதற்கண் ஓரெழுத்தே வருமாறு தொடுப்பது ‘ மோனைத் தொடை’ எ-று.

எ-டு: அப்பர் சுவாமிகளின் தேவாரம். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.இதில் மோனைத் தொடையின் அழகோ அழகு.

” அரியானை அந்தணர்தம் சிந்தையானை

அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்

திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே “

  • இவ் வகுப்பு நிறைவு “