தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 4
தொல்: பொருள்: 8
‘ செய்யுளியல் ‘
சென்ற வகுப்பில் ‘அடி’ பற்றியும், அதன் வகைகளையும் பார்த்தோம், அவற்றை எடுத்துக் காட்டுகளோடு இவ் வகுப்பிற் கற்போம் :
1
சென்ற வகுப்பில் ‘ குறளடி ‘ பார்த்தோம், இனி முச்சீர்கள் கொண்ட
‘முச்சீரடி ‘ பார்ப்போம். இது ‘ சிந்தடி ‘ எனப்படும்.
தி/முறை 1, சீர்காழி- சிரபுரம் – 7:
“நீறணி மேனியன் நீள்மதியோடு
ஆறணி சடையினன் அணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயல் சிரபுரமே “
2
இது அளவடி என்ற நாற்சீரடி :
சுந்தரர், திருவலம்புரம் திருப்பதிகம் :
“எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்
பனைக்கினிப் பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவ னெழுமையும்
மனக்கினி யவன்தன திடம்வலம் புரமே “
திருமந்திரங்கள் யாவும் அளவடி என்ற நாற்சீரடியிலேயே பாடப் பெற்றுள்ளன.
“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாளொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொ ழிந்தாரே “
3
இது ‘ நெடிலடி ‘. ஐஞ்சீரடி:
கந்தரலங்காரம், அருணகிரியார் :
” விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணை யவன்பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “
4
இது ‘ கழிநெடிலடி ‘. திருவாசகம், திருச் சதகம்: ( அறுசீர்க் கழிநெடிலடி)
” ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை யென்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே “
சீர்கள் ஐந்து வரை ஓரடியில் எழுதப்படுதல் வேண்டும். இதற்கு மோனை ஐந்தாம் சீரில் வரும். ஆயின் 6 7 8 போன்ற சீர்கள் வரும் கழிநெடிலடிகளிலும் மோனை ஐந்தாம் சீர்களில் வர வேண்டும், அது தெற்றெனத் தெரிவதற்காக, ஐந்தாம் ஆறாம் சீர்கள் மடித்து எழுதப்பட வேண்டும்:
“ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை யென்புருகிப் .. ”
………என்றிவ்வாறு ஒவ்வோரடியும் மடித்து எழுதப்படும்.
5
இது ‘ எழுசீர்க் கழி நெடிலடி’ – திருவாசகம், பிடித்த பத்து :
” பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெளுந் தருளுவ தினியே ” ( 7 )
6
இது ‘ எண்சீர்க் கழிநெடிலடி’ – அப்பர் சுவாமிகளின் தனித் தாண்டகம், 6 ஆம் திருமுறை :
” சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்தர் அல்லா ராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே “
- இவ்வகுப்பு நிறைவு –