தமிழ் யாப்பிலக்கண வகுப்பு – 4
தொல்:பொரு: 8, செய்யுளியல்
சென்ற வகுப்பில் ஈரசைகள் அமையும் முறை பற்றிப் பார்த்தோம். இப்போது அளபெடை பற்றி விளக்குகிறார்.
” அளபெடை யசைநிலை யாகலு முரித்தே ” ( 329)
இ-ள்:
அளபெடையானது மேற்கூறிய இயற்சீர் நிலைமையேயன்றி, ஓரசையாய் நிற்றலும் உரித்து எ-று
எ-டு:
“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில்”
(திருக்குறள்-தகையணங்குறுத்தல்)
கடாஅ = உயிரளபெடை, நிரைநேர்.
படாஅ = நிரைநேர்.
இதேபோல, அளபெடை அசைகள் இயற்சீராக வந்தமை ஒரு சங்க இலக்கியச் செய்யுளிலே
மிகத் தெளிவாக உள்ளது.
” தேஎந் தேரும் பூஉம் புறவிற்
போஒரி துள்ளுந் சோஒரி நண்ணிக்
குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக்
குடாஅரிக் கோவல ரடாஅரின் வைத்த
கானெறிச் சென்றனர் கொல்லோ
மேனெறிச் சென்று பொருள் படைப்போரே “
தேஎந் – நேர்நேர்
பூஉம் – நேர்நேர்
போஒரி – நேர்நிரை
சோஒரி – நேர்நிரை
குராஅம் – நிரைநேர்
குடாஅரி – நிரைநிரை.
இது போலவே ஒற்றளபெடைக்கும் வரும் என அறிக
2
அடுத்து மூவசை பற்றிப் பேசுகிறார். இது வெண்பா உரிச்சீர் எனப்படும்.
” இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின்
உரிச்சீர் வெண்பா வாகு மென்ப ” ( 331)
இ-ள்”
இயலசையால் ஆகிய இயற்சீரின் இறுதிக்கண், நேரசை பெறுவன நான்கும் ‘ வெண்பா உரிச்சீர் ‘ ஆமென்று புலவர் சொல்வர் எ-று
அதாவது, ஈரசைச் சீர்களின் ஈற்றில் நேரசை ஒன்றைச் சேர்ப்பதனால்
‘ மூவசைச்சீர் ‘ உருவாகும் எனத் தெளிக!
எ- டு :
நேர்நேர் + நேர்
நிரைநேர் + நேர்
நேர்நிரை + நேர்
நிரைநிரை + நேர்
(இங்கு ஈரசைச் சீர்கள் மூவசைச் சீர்களானமை காண்க)
உதாரண வெண்பா இது :
” வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை — மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டி யாரே “
( காளமேகம், சிலேடை வெண்பா)
வெங்கா – நேர்நேர் + ய நேர் = ஆக மூவசைச் சீரானது காண்க! இவ்வாறே ஏனையவும் காண்க!
3
அடுத்து ‘ வஞ்சிச் சீர் ‘ பற்றியுரைக்கிறார்.
“வஞ்சிச் சீரென வகைபெற் றனவே
வெண்சீ ரல்லா மூவசை யான ” (332)
இ-ள்:
வெண்சீரல்லாத மூவசைச் சீரெல்லாம் ‘ வஞ்சிச்சீர் ‘ என்ற வகையாம்.
வஞ்சிச்சீர் 60 என்றுரைப்பர்.
4
இனி, ‘அடி ‘ பற்றி
நோக்குவோம்:
“நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே ” (344)
இ-ள்:
அடியென்று சொல்லப்படுவது ‘ நாற்சீரடி ‘ ஆகும் எ-று
எனவே இரு சீராலும், முச்சீராலும், நாற்சீராலும் வருகின்ற அடிகள் சிறப்பிலவாம்.
அடிகளின் பெயர்கள் :
சுருங்கிய எழுத்தால் வருவன — குறளடி ( இருசீரடி)
மூன்று சீரால் வருவன — சிந்தடி ( முச்சீரடி)
நான்கு சீரால் வருவன — அளவடி ( நாற்சீரடி, நேரடி)
ஐந்து சீரால் வருவன — நெடிலடி ( ஐஞ்சீரடி)
அவற்றின் நீண்டு, 6, 7, 8, சீர்கள் வருவன — கழிநெடிலடி
எ-டுகள்:
“வாசி தீரவே
காசு நல்குவீர்
மாசின் மிழலையீர்
ஏச லில்லையே “
(சம்பந்தர், 11 பாடல்களும் இவ்வாறே. இது திரு விருக்குக் குறள். இது 2 சீர், நான்கடி, இதுபோல அவர் 7 திருப்பதிகங்கள் அருளிய்ள்ளார்)
மேலும் :
சிவஞானபோதம்- மங்கல வாழ்த்தும் அஃதே :
” கல்லால் நிழன்மலை
வில்லா ரருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே “
( யாவும் ஈரசைச் சீர்கள், அதன் அழகு காண்க)
— வகுப்பு 40 நிறைவு —