திருமுறை 1

திருஞான சம்பந்த சுவாமிகள் அருளியது

  • பதிகம்:136, ஊர்: திரு தருமபுரம்

    பதிகம்:136, ஊர்: திரு தருமபுரம்
    பண்: யாழ்மூரி இராகம்: அடாணா

    மாதர் மடப்பிடியும் மட வன்னமும் அன்னதோர்
    நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
    அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
    இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
    தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
    எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

    பொங்கு நடைப் புகலில் விடை யாமவர் ஊர்திவெண்
    பொடி யணி தடங் கொள்மார்பு பூண நூல்புரள
    மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவர் ஆடுவர்
    வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
    சங்கு கடல்திரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
    தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
    தங்கு கதிர்ம்மணி நித்திலம் எல்லிருள் ஒல்கநின்று
    இலங் கொளிந் நலங் கெழில் தருமபு ரம்பதியே

    விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
    டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
    கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
    கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
    பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
    வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
    தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
    கருங் கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே

    வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
    வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
    காருற நின்றல ரும்மலர்க் கொன்றையங் கண்ணியர்
    கடுவ் விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
    பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
    படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
    தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
    தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே

    நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
    கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
    பேரும வர்க்கெனை யாயிர முன்னைப்பி றப்பிறப்
    பிலா தவ ருடல் தடர்த்த பெற்றி யாரறிவார்
    ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
    வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
    தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
    கடி படு செடி பொழில் தருமபு ரம்பதியே

    கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
    குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
    மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
    வலம் மலி படை விடை கொடிகொடும் மழுவ்வாள்
    யாழையும் எள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
    துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியுந்நல்
    தாழையும் ஞாழலும் நீடிய கானலின் அள்ளலி
    சைபுள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே

    தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
    திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரியத்
    தூமரு செஞ்சடை யில்துதை வெண்மதி துன்றுகொன்
    றைதொல் புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்
    காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
    கடல் லடை கழி யிழிய முண்ட கத்தயலே
    தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
    வெறி கமழ் செறிவ் வயல் தருமபு ரம்பதியே

    தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
    குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
    கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
    கொலைம் மலி படையொர் சூல மேந்திய குழகர்
    பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
    கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
    தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்தடங்
    கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே

    வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
    வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
    கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
    குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
    ஆர்மலி யாழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
    மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
    தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
    தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே

    புத்தர்கள் தத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
    மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
    பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
    நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
    முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
    புணர்ம் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
    தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
    தடர்ந் திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே

    பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலீ
    பொரூஉ புனல் திரூஉ வமர் புகல்லியென் றுலகில்
    தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
    துசெந் தமிழ்த் தடங் கடல் தருமபு ரம்பதியைப்
    பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
    யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
    இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
    உறு வர்கள் இடர் பிணி துயரணைவ் விலரே
    திருச்சிற்றம்பலம்