திருவாசகம்

  • 22 கோயில் திருப்பதிகம்

    22 கோயில் திருப்பதிகம்
    பதிகச் சிறப்பு: அநுபோக இலக்கணம்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
    புலனைந்தின் வழியடைத் தமுதே
    ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
    உள்ளவா காணவந் தருளாய்
    தேறலின் தெளிவே சிவபெரு மானே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
    இன்பமே என்னுடை அன்பே 1

    அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
    ஆனந்த மாய்க்கசிந் துருக
    என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
    யானிதற் கிலனொர்கைம் மாறு
    முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
    முத்தனே முடிவிலா முதலே
    தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
    சீருடைச் சிவபுரத் தரைசே 2

    அரைசனே அன்பர்க்கு அடியனே னுடைய
    அப்பனே ஆவியோ டாக்கை
    புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
    பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
    திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
    யானுன்னை உரைக்குமா றுணர்த்தே 3

    உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார்
    உணர்வுக்கும் தெரிவரும் பொருளே
    இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
    எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே
    திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக்
    குறுகினேற் கினியென்ன குறையே 4

    குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
    ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
    மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
    மனத்திடை மன்னிய மன்னே
    சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
    இனியுன்னை என்னிரக் கேனே 5

    இரந்திரந் துருக என்மனத் துள்ளே
    எழுகின்ற சோதியே இமையோர்
    சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    நிரந்தஆ காயம் நீர்நிலம் தீகால்
    ஆயவை அல்லையாய் ஆங்கே
    கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
    கண்ணுறக் கண்டுகொண் டின்றே 6

    இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
    எழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
    நீயலால் பிறிதுமற் றின்மை
    சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    ஒன்றும்நீ யல்லை அன்றியொன் றில்லை
    யாருன்னை அறியகிற் பாரே 7

    பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
    பரந்ததோர் படரொளிப் பரப்பே
    நீருறு தீயே நினைவதேல் அரிய
    நின்மலா நின்னருள் வெள்ளச்
    சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    யாருற வெனக்கிங்கு ஆரயல் உள்ளார்
    ஆனந்தம் ஆக்குமென் சோதி 8

    சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
    ஒருவனே சொல்லுதற் கரிய
    ஆதியே நடுவே அந்தமே பந்தம்
    அறுக்கும் ஆனந்தமா கடலே
    தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
    வந்துநின் இணையடி தந்தே 9

    தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
    சங்கரா ஆர்கொலோ சதுரர்
    அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
    யாதுநீ பெற்றதொன் றென்பால்
    சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
    யானிதற் கிலன்ஓர்கைம் மாறே 10

                             திருச்சிற்றம்பலம்