திருவாசகம்

  • 25 ஆசைப் பத்து

    25 ஆசைப் பத்து
    பதிகச் சிறப்பு: ஆத்தும இலக்கணம்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    கருடக் கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
    பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
    இருளைத் துரந்திட் டிங்கே வாவென் றங்கே கூவும்
    அருளைப் பெறுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 1

    மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த
    குப்பா யம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
    எப்பா லவர்க்கும் அப்பா லாம்என் ஆரமு தேயோ
    அப்பா காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 2

    சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இதுசிதையக்
    கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
    தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
    ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 3

    மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
    தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம்எம் பெருமானே
    உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம்
    அடைந்துநின் றிடுவான் ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 4

    அளிபுண் ணகத்துப் புறந்தோல் மூடி அடியே னுடையாக்கை
    புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும் விடையாய் பொடியாடீ
    எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னா ரமுதேயோ
    அளியேன் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 5

    எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை
    வைத்தாய் வாங்காய் வானோர் அறியா மலர்ச்சே வடியானே
    முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
    அத்தா சால ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 6

    பாரோர் விண்ணோர் பரவி ஏத்தும் பரனே பரஞ்சோதி
    வாராய் வாரா உலகம் தந்து வந்தாட் கொள்வானே
    பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனவேத்த
    ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 7

    கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
    எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று
    ஐயா என்றன் வாயால் அரற்றி அழல்சேர் மெழுகொப்ப
    ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 8

    செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுர நகர்புக்குக்
    கடியார் சோதி கண்டு கொண்டென் கண்ணிணை களிகூரப்
    படிதா னில்லாப் பரம்பர னேஉன் பழவடி யார்கூட்டம்
    அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 9

    வெஞ்சே லனைய கண்ணார்தம் வெகுளி வலையில் அகப்பட்டு
    நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
    பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால்
    அஞ்சேல் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே 10

                             திருச்சிற்றம்பலம்