திருவாசகம்

  • 24 அடைக்கலப் பத்து

    24 அடைக்கலப் பத்து
    பதிகச் சிறப்பு: பக்குவ நிண்ணயம்
    யாப்பு: பலவகை

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த
    பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
    புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
    அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே 1

    வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால்
    பொறுப்பவனே அராப்பூண் பவனேபொங்கு கங்கைசடைச்
    செறுப்பவனே நின்திரு வருளாலென் பிறவியைவேர்
    அறுப்பவனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 2

    பெரும்பெருமான் என்பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
    தரும்பெருமான் சதுரப் பெருமான்என் மனத்தினுள்ளே
    வரும்பெருமான் மலரோன் நெடுமால றியாமல்நின்ற
    அரும்பெருமான் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 3

    பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில் நின்கழற்புணைகொண்டு
    இழிகின்ற அன்பர்கள் ஏறினர்வான்யான் இடர்க்கடல்வாய்ச்
    சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்சுறவெறிய
    அழிகின்றனன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 4

    சுருள்புரி கூழையர் சூழலிற்பட்டுன் திறம்மறந்திங்கு
    இருள்புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன் மைத்தடங்கண்
    வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்பங்க விண்ணோர்பெருமான்
    அருள்புரியாய் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 5

    மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து
    தாழியைப் பாவுதயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
    வாழிஎப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்
    ஆழியப்பா உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 6

    மின்கணினார் நுடங்கும் இடையார்வெகுளி வலையில்அகப்பட்டுப்
    புன்கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி
    என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
    அங்கணனே உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 7

    மாவடு வகிரன்ன கண்ணிபங்கா நின்மலரடிக்கே
    கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய் நின்குறிப்பறியேன்
    பாவிடையாடு குழல்போல் கரந்து பரந்ததுள்ளம்
    ஆகெடுவேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 8

    பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
    மறிவறியாச் செல்வம் வந்துபெற்றார் உன்னைவந்திப்பதோர்
    நெறியறியேன் நின்னையே அறியேன் நின்னையேயறியும்
    அறிவறியேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 9

    வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
    விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என்விதியின்மையால்
    தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்ளாய்
    அழுங்குகின்றேன் உடையாய் அடியேன்உன் அடைக்கலமே 10

                             திருச்சிற்றம்பலம்