27புணர்ச்சிப் பத்து
பதிகச் சிறப்பு: அத்துவித இலக்கணம்
யாப்பு: ஆசிரிய விருத்தம் தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
சுடர்பொற் குன்றைத் தோளா முத்தை வாளா தொழும்புகந்து
கடைபட் டேனை ஆண்டுகொண்ட கருணா லயனைக் கருமால்பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னாரமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 1
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய
சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து சிவனெம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக்கு உள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 2
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை அள்ளூ றுள்ளத்து அடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 3
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனும்
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்தசுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின்சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 4
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும்மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்
நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்டு ஆவா என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 5
பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 6
நினையப் பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலரால்
புனையப் பெறுவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 7
நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 8
தாதாய் மூவே ழுலகுக்குந் தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்றென் றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 9
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதும்
கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பா னேஎம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்துபாதப்
பூப்போ தணைவ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே 10
திருச்சிற்றம்பலம்