திருவாசகம்

  • 28 வாழாப் பத்து

    28 வாழாப் பத்து
    பதிகச் சிறப்பு: முத்தி உபாயம்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
    ஆண்டநீ அருளிலை யானால்
    வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 1

    வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
    மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
    உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
    குணர்விறந் துலகமூ டுருவும்
    செம்பெரு மானே சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    எம்பெரு மானே என்னையாள் வானே
    என்னைநீ கூவிக்கொண் டருளே 2

    பாடிமால் புகழும் பாதமே அல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    தேடிநீ ஆண்டாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    ஊடுவ துன்னோ டுவப்பதும் உன்னை
    உணர்த்துவ துனக்கெனக் குறுதி
    வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 3

    வல்லைவா ளரக்கர் புரமெரித் தானே
    மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
    தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    எல்லைமூ வுலகும் உருவியன் றிருவர்
    காணுநாள் ஆதியீ றின்மை
    வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 4

    பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    திண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
    என்றிவை நின்கணே வைத்து
    மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 5

    பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
    அருளினை மருளினால் மறந்த
    வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 6

    பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    திருவுயர் கோலச் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
    கலந்துநான் வாழுமா றறியா
    மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 7

    பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
    ஆரமு தேஅடி யேனை
    வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 8

    பாவநா சாஉன் பாதமே யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    தேவர்தந் தேவே சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
    முழங்கழ லாய்நிமிர்ந் தானே
    மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 9

    பழுதில்தொல் புகழாள் பங்கநீ யல்லால்
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
    செழுமதி அணிந்தாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
    தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர்
    துணையென நினைவனோ சொல்லாய்
    மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே 10

                             திருச்சிற்றம்பலம்