திருவாசகம்

  • 3 திருவண்டப்பகுதி

    3 திருவண்டப்பகுதி
    பதிகச் சிறப்பு: சிவனது தூல சூக்குமத்தை வியந்தது
    யாப்பு: இணைக்குறள் ஆசிரியப்பா

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
    இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் 5

    சிறிய வாகப் பெரியோன் தெரியின்
    வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
    தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
    மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
    சூக்கமொடு தூலத்துச் 10

    சூறை மாருதத் தெறியது வளியிற்
    கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
    படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
    காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
    கரப்போன் கரப்பவை கருதாக் 15

    கருத்துடைக் கடவுள் திருத்தகும்
    அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்
    வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி
    கீடம் புரையுங் கிழவோன் நாடொறும்
    அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு 20

    மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
    தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
    வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
    காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
    நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25

    மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
    எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
    அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
    முன்னோன் காண்க முழுதோன் காண்க
    தன்னே ரில்லோன் தானே காண்க 30

    ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
    கானப் புலியுரி அரையோன் காண்க
    நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
    ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
    இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35

    அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
    பரமன் காண்க பழையோன் காண்க
    பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
    அற்புதன் காண்க அனேகன் காண்க
    சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

    சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
    பத்தி வலையிற் படுவோன் காண்க
    ஒருவன் என்னும் ஒருவன் காண்க
    விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
    அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க 45

    இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
    அரியதில் அரிய அரியோன் காண்க
    மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க
    நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
    மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க 50

    அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
    பந்தமும் வீடும் படைப்போன் காண்க
    நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
    கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
    யாவரும் பெறவுறும் ஈசன் காண்க 55

    தேவரும் அறியாச் சிவனே காண்க
    பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
    கண்ணால் யானும் கண்டேன் காண்க
    அருணனி சுரக்கும் அமுதே காண்க
    கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

    புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
    சிவனென யானும் தேறினன் காண்க
    அவனெனை ஆட்கொண்டு அருளினன் காண்க
    குவளைக் கண்ணி கூறன் காண்க
    அவளுந் தானும் உடனே காண்க 65

    பரமா னந்தப் பழங்கட லதுவே
    கருமா முகிலில் தோன்றித்
    திருவார் பெருந்துறை வரையி லேறித்
    திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
    ஐம்புலப் பந்தனை வாளர விரிய 70

    வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
    நீடெழில் தோன்றி வாளொளி மிளிர
    எந்தம் பிறவியில் கோபம் மிகுத்து
    முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
    பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

    எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
    செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
    கேதக் குட்டங் கையற வோங்கி
    இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
    நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

    தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
    அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன
    ஆயிடை வானப் பேரியாற் றகவயிற்
    பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
    சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து 85

    ஊழூழ் ஓங்கிய நங்கள்
    இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
    உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
    சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
    வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

    மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
    மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
    அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
    தொண்ட உழவ ராரத் தந்த
    அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க 95

    கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
    அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
    அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க
    நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
    சூழிருந் துன்பம் துடைப்போன் வாழ்க 100

    எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
    கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
    பேரமைத் தோளி காதலன் வாழ்க
    ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
    காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க 105

    நச்சர வாட்டிய நம்பன் போற்றி
    பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
    நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை
    நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
    நிற்பன நிறீஇச் 110

    சொற்பதங் கடந்த தொல்லோன்
    உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
    கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
    விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
    பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

    ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
    இன்றெனக் கெளிவந் தருளி
    அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
    இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி
    அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

    ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
    ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
    போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
    மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
    மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் 125

    திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
    முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
    ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
    உற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும்
    மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் 130

    இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு
    அத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
    முனிவற நோக்கி நனிவரக் கௌவி
    ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
    வாணுதற் பெண்ணென ஒளித்தும் சேண்வயின் 135

    ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
    துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
    அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
    ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
    பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140

    ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
    ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
    தாள்தளை இடுமின்
    சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
    பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் 145

    தன்னே ரில்லோன் தானேயான தன்மை
    என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
    அறைகூவி யாட்கொண் டருளி
    மறையோர் கோலங் காட்டி யருளலும்
    உளையா அன்பென் புருக வோலமிட்டு 150

    அலைகடல் திரையின் ஆர்த்தார்த் தோங்கித்
    தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
    பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
    நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்
    கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் 155

    ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு
    கோற்றேன் கொண்டு செய்தனன்
    ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
    வீழ்வித் தாங்கன்று
    அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160

    ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
    தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
    சொல்லுவ தறியேன் வாழி முறையோ
    தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
    தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165

    அருளிய தறியேன் பருகியும் ஆரேன்
    விழுங்கியும் ஒல்ல கில்லேன்
    செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்
    துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
    வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170

    தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
    குரம்பை தோறும் நாயுட லகத்தே
    குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய
    அற்புத மான அமுத தாரைகள்
    எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175

    உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்கு
    அள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய
    கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
    என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
    கருணை வான்தேன் கலக்க 180

    அருளொடு பராவமு தாக்கினன்
    பிரமன்மா லறியாப் பெற்றி யோனே 182

                             திருச்சிற்றம்பலம்