திருவாசகம்

  • 4 போற்றித் திருவகவல்ல்

    4 போற்றித் திருவகவல்
    பதிகச் சிறப்பு: சகத்தின் உற்பத்தி
    யாப்பு: நிலைமண்டில ஆசிரியப்பா

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
    ஈரடி யாலே மூவுல களந்து
    நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
    போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்று
    அடிமுடி யறியும் ஆதர வதனில் 5

    கடுமுரண் ஏன மாகி முன்கலந்து
    ஏழ்தலம் உருவ இடந்து பின்னெய்த்து
    ஊழி முதல்வ சயசய என்று
    வழுத்தியுங் காணா மலரடி இணைகள்
    வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் 10

    யானை முதலா எறும்பு ஈறாய
    ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும்
    மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
    ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
    ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 15

    இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
    மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
    ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
    ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும் 20

    ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
    தக்க தசமதி தாயொடு தான்படும்
    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 25

    ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
    ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
    காலை மலமொடு கடும்பகற் பசிநிசி
    வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
    கருங்குழல் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் 30

    ஒருங்கிய சாயல் நெருங்கியுள் மதர்த்துக்
    கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
    தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்
    தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்
    கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் 35

    பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
    கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
    செல்வ மென்னும் அல்லலில் பிழைத்தும்
    நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும் 40

    புல்வரம் பாய பலதுறைப் பிழைத்தும்
    தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
    முனிவி லாததோர் பொருளது கருதலும்
    ஆறு கோடி மாயா சக்திகள்
    வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின 45

    ஆத்த மானார் அயலவர் கூடி
    நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
    சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
    பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
    விரத மேபர மாகவே தியரும் 50

    சரத மாகவே சாத்திரங் காட்டினர்
    சமய வாதிகள் தத்தம் மதங்களே
    அமைவ தாக அரற்றி மலைந்தனர்
    மிண்டிய மாயா வாதம் என்னும்
    சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து 55

    உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
    கலாபே தத்த கடுவிடம் எய்தி
    அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
    தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
    தழலது கண்ட மெழுகது போலத் 60

    தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து
    ஆடியும் அலறியும் பாடியும் பரவியுங்
    கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும்
    படியே யாகிநல் லிடையறா அன்பிற்
    பசுமரத் தாணி அறைந்தாற் போலக் 65

    கசிவது பெருகிக் கடலென மறுகி
    அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
    சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
    நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
    பூணது வாகக் கோணுத லின்றிச் 70

    சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
    கதியது பரமா அதிசய மாகக்
    கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
    மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா
    தருபரத் தொருவன் அவனியில் வந்து 75

    குருபர னாகி அருளிய பெருமையைச்
    சிறுமையென் றிகழாதே திருவடி இணையைப்
    பிறிவினை யறியா நிழலது போல
    முன்பின் னாகி முனியா தத்திசை
    என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி 80

    அன்பெனும் ஆறு கரையது புரள
    நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
    உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
    கரமலர் மொட்டித் திருதயம் மலரக்
    கண்களி கூர நுண்துளி அரும்பச் 85

    சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
    தாயே யாகி வளர்த்தனை போற்றி
    மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
    கைதர வல்ல கடவுள் போற்றி
    ஆடக மதுரை அரசே போற்றி 90

    கூடல் இலங்கு குருமணி போற்றி
    தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
    இன்றெனக் காரமு தானாய் போற்றி
    மூவா நான்மறை முதல்வா போற்றி
    சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி 95

    மின்னா ருருவ விகிர்தா போற்றி
    கன்னார் உரித்த கனியே போற்றி
    காவாய்க் கனகக் குன்றே போற்றி
    ஆவா என்றெனக் கருளாய் போற்றி
    படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி 100

    இடரைக் களையும் எந்தாய் போற்றி
    ஈச போற்றி இறைவ போற்றி
    தேசப் பளிங்கின் திரளே போற்றி
    அரைசே போற்றி அமுதே போற்றி
    விரைசேர் சரண விகிர்தா போற்றி 105

    வேதி போற்றி விமலா போற்றி
    ஆதி போற்றி அறிவே போற்றி
    கதியே போற்றி கனியே போற்றி
    நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
    உடையாய் போற்றி உணர்வே போற்றி 110

    கடையேன் அடிமை கண்டாய் போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    குறியே போற்றி குணமே போற்றி
    நெறியே போற்றி நினைவே போற்றி 115

    வானோர்க் கரிய மருந்தே போற்றி
    ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
    மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
    ஆழா மேயருள் அரசே போற்றி
    தோழா போற்றி துணைவா போற்றி 120

    வாழ்வே போற்றிஎன் வைப்பே போற்றி
    முத்தா போற்றி முதல்வா போற்றி
    அத்தா போற்றி அரனே போற்றி
    உரையுணர் விறந்த ஒருவ போற்றி
    விரிகடல் உலகின் விளைவே போற்றி 125

    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகி லாகிய கண்ணே போற்றி
    மன்னிய திருவருள் மலையே போற்றி
    என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
    சென்னியில் வைத்த சேவக போற்றி 130

    தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    மானேர் நோக்கி மணாளா போற்றி 135

    வானகத் தமரர் தாயே போற்றி
    பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140

    வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
    அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
    கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
    நனவிலும் நாயேற் கருளினை போற்றி
    இடைமரு துறையும் எந்தாய் போற்றி 145

    சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
    ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    கண்ணார் அமுதக் கடலே போற்றி 150

    ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
    பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
    பராய்த்துறை மேவிய பரனே போற்றி
    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
    மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155

    குற்றா லத்தெங் கூத்தா போற்றி
    கோகழி மேவிய கோவே போற்றி
    ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
    பாங்கார் பழனத் தழகா போற்றி
    கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160

    அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
    இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
    கத்திக் கருளிய அரசே போற்றி
    தென்னா டுடைய சிவனே போற்றி
    எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165

    ஏனக் குருளைக் கருளினை போற்றி
    மானக் கயிலை மலையாய் போற்றி
    அருளிட வேண்டும் அம்மான் போற்றி
    இருள்கெட அருளும் இறைவா போற்றி
    தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170

    களங்கொளக் கருத அருளாய் போற்றி
    அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
    நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
    அத்தா போற்றி ஐயா போற்றி
    நித்தா போற்றி நிமலா போற்றி 175

    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    மறையோர் கோல நெறியே போற்றி
    முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

    உறவே போற்றி உயிரே போற்றி
    சிறவே போற்றி சிவமே போற்றி
    மஞ்சா போற்றி மணாளா போற்றி
    பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
    அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி 185

    இலங்கு சுடரெம் ஈசா போற்றி
    கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
    குவைப்பதி மலிந்த கோவே போற்றி
    மலைநா டுடைய மன்னே போற்றி
    கலையா ரரிகே சரியாய் போற்றி 190

    திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
    பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
    அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
    மருவிய கருணை மலையே போற்றி
    துரியமும் இறந்த சுடரே போற்றி 195]

    தெரிவரி தாகிய தெளிவே போற்றி
    தோளா முத்தச் சுடரே போற்றி
    ஆளா னவர்கட்கு அன்பா போற்றி
    ஆரா அமுதே அருளே போற்றி
    பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200

    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
    சிந்தனைக் கரிய சிவமே போற்றி
    மந்திர மாமலை மேயாய் போற்றி 205

    எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங்குரு விக்கன்று அருளினை போற்றி
    இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 210

    படியுறப் பயின்ற பாவக போற்றி
    அடியொடு நடுவீ றானாய் போற்றி
    நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல்
    பரகதி பாண்டியற் கருளினை போற்றி
    ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி 215

    செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
    கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
    தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
    பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
    குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி 220

    புரம்பல எரித்த புராண போற்றி
    பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
    போற்றி போற்றி புயங்கப் பெருமான்
    போற்றி போற்றி புராண காரண
    போற்றி போற்றி சயசய போற்றி 225

                             திருச்சிற்றம்பலம்