30 திருக்கழுக்குன்றப் பதிகம்
பதிகச் சிறப்பு: குரு தரிசனம்
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: திரு கழுக்குன்றம்
இறைவர்: வேதபுரீசுவரர், பக்தவத்சலர்
இறைவி: பெண்ணினல்லாள் அம்மை, மலைச்சொக்க நாயகி, திரிபுரசுந்தரி
இருப்பிடம்: செங்கல்பட்டு அருகே உள்ளது.
தலக்குறிப்பு:
மாணிக்கவாசகருக்கு இறைவன் குருமூர்த்தி வடிவமாய்க் காட்சியருளிய தலம். வேதங்கள் மலையுருவாய் இறைவனைத் தாங்குதலின் வேதகிரி எனவும் இத்தலத்திற்குப் பெயருண்டு. 12 ஆண்டுகட்கு ஒருமுறை சங்கு பிறக்கின்ற பெருமையுடைய ‘சங்கு பிறந்த குளம்’ உடையது. கழுகுகள் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
திருச்சிற்றம்பலம்
பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 1
பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங்
கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 2
மலங்கி னேன்கண்ணின் நீரை மாற்றி மலங்கெ டுத்த பெருந்துறை
விலங்கி னேன்வினைக் கேட னேன்இனி மேல்வி ளைவத றிந்திலேன்
இலங்கு கின்றநின் சேவ டிகளி ரண்டும் வைப்பிட மின்றியே
கலங்கி னேன்கலங் காம லேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 3
பூணொ ணாததொ ரன்பு பூண்டு பொருந்தி நாடொறும் போற்றவும்
நாணொ ணாததொர் நாணம் எய்தி நடுக்க டலுள்அ ழுந்திநான்
பேணொ ணாதபெ ருந்து றைப்பெருந் தோணி பற்றி யுகைத்தலும்
காணொ ணாத்திருக் கோலம்நீ வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 4
கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருந்துறைக் கொண்டலே
சீல மேதும் அறிந்தி லாதஎன் சிந்தை வைத்தசி காமணி
ஞால மேகரி யாக நானுனை நச்சி நச்சிட வந்திடும்
கால மேஉனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 5
பேத மில்லதொர் கற்ப ளித்த பெருந்து றைப்பெரு வெள்ளமே
ஏத மேபல பேச நீஎனை ஏதி லார்முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்சர ணாமெனக்
காத லால்உனை ஓத நீவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 6
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்கு ணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்ம லப்பழ வல்வி னைக்குள் அழுந்தவும்
துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின் தூய்ம லர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்மு னேவந்து காட்டி னாய்கழுக் குன்றிலே 7
திருச்சிற்றம்பலம்