44 எண்ணப் பதிகம்
பதிகச் சிறப்பு: ஒழியா இன்பத்து உவகை
யாப்பு: ஆசிரிய விருத்தம்
தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.
தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.
திருச்சிற்றம்பலம்
பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங்கமல மலர்போல்
ஆருரு வாயஎன் ஆரமு தேயுன் அடியவர் தொகைநடுவே
ஓருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே 1
உரியேன் அல்லேன் உனக் கடிமை உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே 2
என்பே உருக நின்னருள் அளித்துன் இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே 3
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல்காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வனே முறையோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே 4
காணும தொழிந்தேன் நின்திருப் பாதம் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந் தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரினும் காணவும் நாணுவனே 5
பாற்றிரு நீற்றெம் பரமனைப் பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை யளிக்குஞ் சோதியை நீதியிலேன்
போற்றியென் அமுதே எனநினைந் தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென்னுள்ளே
ஆற்றுவ னாக உடையவ னேஎனை ஆவஎன் றருளாயே 6
திருச்சிற்றம்பலம்