திருவாசகம்

  • 45 யாத்திரைப் பத்து

    45 யாத்திரைப் பத்து
    பதிகச் சிறப்பு: அநுபவாதீதம் உரைத்தல்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
    ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
    ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
    போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே 1

    புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
    மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
    நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
    தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே 2

    தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
    யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்
    கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
    போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே 3

    அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
    கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
    செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான்
    பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே 4

    விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
    உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப்படுமின்
    அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
    புடைபட் டுருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே 5

    புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தாளே புந்திவைத்திட்டு
    இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
    திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
    நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே 6

    நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
    பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
    நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
    பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே 7

    பெருமான் பேரா னந்தத்துப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
    அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
    திருமா மணிசேர் திருக்கதவந் திறந்த போதே சிவபுரத்துத்
    திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே 8

    சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
    போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம் ஆரப் பருகி ஆராத ஆர்வங் கூர அழுந்துவீர்
    போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே 9

    புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தா ளாகாதீர்
    மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
    தெருள்வீர் ஆகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
    அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே 10

                             திருச்சிற்றம்பலம்