46 திருப் படையெழுச்சி
பதிகச் சிறப்பு: பிரபஞ்சப் போர்
யாப்பு: கலிவிருத்தம்
தலம்: கோயில் (சிதம்பரம்)
இறைவர்: மூலநாதர்
இறைவி: உமையம்மை
இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.
தலக்குறிப்பு:
கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.
திருச்சிற்றம்பலம்
ஞானவாள் ஏந்துமையர் நாதப் பறையறைமின்
மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே 1
தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்டிறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்டிறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம்நாம் அல்லற்படை வாராமே 2
திருச்சிற்றம்பலம்