47 திரு வெண்பா
பதிகச் சிறப்பு: அணைந்தோர் தன்மை
யாப்பு: நேரிசை வெண்பா
தலம்: திரு பெருந்துறை
இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
இறைவி: யோகாம்பாள்
இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.
தலக்குறிப்பு:
மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.
திருச்சிற்றம்பலம்
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகா தென்செய்கேன்-செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து 1
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்-தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து 2
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்-வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான் 3
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து 4
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும்-இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று 5
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும்வந் தென்மனத்தை-அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து 6
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி 7
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை-யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை 8
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான்-மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும் 9
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்-தருங்காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து 10
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய்-அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து 11
திருச்சிற்றம்பலம்