திருவாசகம்

  • 48 பண்டாய நான்மறை
    1. பண்டாய நான்மறை
      பதிகச் சிறப்பு: அநுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்
      யாப்பு: நேரிசை வெண்பா

    தலம்: திரு பெருந்துறை
    இறைவர்: குருசுவாமி, ஆத்ம நாதர்
    இறைவி: யோகாம்பாள்
    இருப்பிடம்: தஞ்சை, அறந்தாங்கி அருகே உள்ளது. ஆவுடையார் கோயில் என இப்போது வழங்குகிறது.

    தலக்குறிப்பு:
    மாணிக்க வாசகர் அருள் பெற்ற தலம். இறைவனே குருவாக வந்து காட்சியளித்த தலம். இறைவன் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயில். கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோயில்.

                             திருச்சிற்றம்பலம் 

    பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
    கண்டாரு மில்லைக் கடையேனைத்-தொண்டாகக்
    கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
    உண்டாமோ கைம்மா றுரை 1

    உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
    வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த-வள்ளல்
    மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
    கருவுங் கெடும்பிறவிக் காடு 2

    காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
    நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை-வீட்டி
    அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
    மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து 3

    வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
    தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும்-சூழ்ந்தமரர்
    சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
    நன்றிறைஞ்சி ஏத்தும் நமர் 4

    நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
    எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
    மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
    கழியா திருந்தவனைக் காண் 5

    காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
    பேணும் அடியார் பிறப்பகலக்-காணும்
    பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
    பிரியானை வாயாரப் பேசு 6

    பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
    மாசில் மணியின் மணிவார்த்தை-பேசிப்
    பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
    மருந்தினடி என்மனத்தே வைத்து 7

                             திருச்சிற்றம்பலம்