திருவாசகம்

  • 49 திருப் படையாட்சி

    49 திருப் படையாட்சி
    பதிகச் சிறப்பு: சீவ உபாதி ஒழிதல்
    யாப்பு: ஆசிரிய விருத்தம்

    தலம்: கோயில் (சிதம்பரம்)
    இறைவர்: மூலநாதர்
    இறைவி: உமையம்மை
    இருப்பிடம்: சிதம்பரம். சென்னையிலிருந்து 250 கி.மீ.

    தலக்குறிப்பு:
    கோயில் என்பதையே சிறப்புப் பெயராக உடைய தலம். இங்கே நடராசர் பெருமை உடையவர். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். பஞ்ச சபைகளில் பொற்சபை. சோழ மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கோயில்.

                            திருச்சிற்றம்பலம் 

    கண்களி ரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
    காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
    மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
    மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
    பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
    பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
    விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
    மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே 1

    ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறும் ஆகாதே
    உன்னடி யாரடி யாரடி யோமென உய்ந்தன ஆகாதே
    கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது ஆகாதே
    காரண மாகும் அனாதி குணங்கள் கருத்துறும் ஆகாதே
    நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே
    நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுதும் ஆகாதே
    என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
    ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே 2

    பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே
    பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
    அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே
    ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
    செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடும் ஆகாதே
    சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே
    இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர் ஏகுவ தாகாதே
    என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே 3

    என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறும் ஆகாதே
    எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுதும் ஆகாதே
    நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
    நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
    மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
    மாமறை யும்மறி யாமலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே
    இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
    என்னையு டைப்பெரு மான்அரு ளீசன் எழுந்தரு ளப்பெறிலே 4

    மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறும் ஆகாதே
    வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே
    கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறும் ஆகாதே
    காதல்செ யும்மடி யார்மனம் இன்று களித்திடும் ஆகாதே
    பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறும் ஆகாதே
    பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
    எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
    என்னையு டைப்பெரு மான்அரு ளீசன் எழுந்தரு ளப்பெறிலே 5

    பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடும் ஆகாதே
    பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே
    மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே
    வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே
    தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
    தானடி யோமுட னேயுய வந்து தலைப்படும் ஆகாதே
    இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடும் ஆகாதே
    என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே 6

    சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரும் ஆகாதே
    துண்ணென என்னுளம் மன்னிய சோதி தொடர்ந்தெழும் ஆகாதே
    பல்லியல் பாய பரப்பற வந்த பராபரம் ஆகாதே
    பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழும் ஆகாதே
    வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடும் ஆகாதே
    விண்ணவ ரும்மறி யாத விழுப்பொருள் இப்பொருள் ஆகாதே
    எல்லையி லாதன எண்குண மானவை எய்திடும் ஆகாதே
    இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தரு ளப்பெறிலே 7

    சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
    சாதிவி டாத குணங்கள்நம் மோடு சலித்திடும் ஆகாதே
    அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே
    ஆசையெ லாம்அடி யாரடி யோம்எனும் அத்தனை ஆகாதே
    செங்கயல் ஒண்கண்ம டந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
    சீரடி யார்கள் சிவானுப வங்கள் தெரிந்திடும் ஆகாதே
    எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
    ஈறறி யாமறை யோன்எனை ஆள எழுந்தரு ளப்பெறிலே 8

                             திருச்சிற்றம்பலம்