இலக்கணத் தனிப் பொருள் வகுப்பு – 1
‘ பதம் ‘
பல மாணாக்கர்களின் வேண்டுகோளுக்கு அமைய இவ்வகுப்பு இடம் பெறுகிறது.
1
பதம் என்பது சொல், கிளவி என்பதை ஒத்த சொல்லாகும். ‘ பதம், பகுபதம், பகாப்பதம் ‘ போன்ற சொல்களைத் தொல்காப்பியர் மிகச் சொற்பமே பயன்படுத்தி உள்ளார். ஆயினும் சொல் பற்றிய விளக்கங்களை அவர் சொல்லதிகாரத்தில் விளக்கினார் என்பதை நாங்கள் முன்பே கற்றுள்ளோம். ஆகத் தொல்காப்பியரும், பவணந்தியாரும் பதங்கள் பற்றி உரைத்தவற்றை இப்போது பொதுவாகக் காண்போம்.
2
பகுக்கப்படுவது பதம் ஆகும். எழுத்தால் அல்லது எழுத்துகளால் ஆகிப் பொருள் தருவது பதம் ஆகும். இப் பதம் இரண்டு வகை :
பகுபதம் , பகாப்பதம்
3
பகுபதம் :
ஒரு சொல்லை அதாவது பதத்தை பகுதி விகுதி ஆகிய உறுப்புகளாகப் பகுக்க முடியுமாயின், அது ‘ பகுபதம் ‘ எனப்படும்.
ஒரு மொழியில் இருப்பது ‘சொல்’, அச் சொல்லின் கூறு ‘ அலகு ‘ எனப் பெயர் பெறும்.
எ-டு:
அறிஞன், பாடினான், ஆடினாள், உதித்தான், என்பன பகுபதங்களிற் சிலவாம்.
அறி + ஞ் + அன்
பாடு + இன் + ஆள்
ஆடு+இன் + ஆள்
உதி + த் + த் + ஆன்
இவ்வாறு பகுத்த பின்னர் பொருள் தருவது பகுபதமாகும்.
4
பகாப்பதம் :
ஒரு பதத்தினைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால், அது ‘ பகாப்பதம் ‘ ஆகும்.
எ-டு:
மரம், கடல், தலை, பூ, தேன், பால், மழை எனப் பலவாம். ஆகப் பிரித்தால் பிரிக்க முடியாதது அல்லது பொருள் தராதது பகாப்பதம், பொருள் தருவது பகுபதம் எனவறிக.
5
ஒரு பகுபதத்தைப் பகுக்கும் போது, அது 6 உறுப்புகளாகப் பிரியும். அவை ‘ பகுபத உறுப்புகள்’ எனப் பெயர் பெறும். அவற்றை ஒவ்வொன்றாக நோக்குவோம் :
- பகுதி – ஒரு பதத்தின் முதலில் நிற்கும் சொல். இதனைப் பகுக்க இயலாது, ஆதலால் இது பகாப்பதம் எனப்படும்.
” தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் ” ( நன்னூல் 134)
தொல்காப்பியர் பகுதியை ‘ அடிச்சொல்/ வேர்ச்சொல் ‘ எனக் குறித்தார். சில இடங்களில் ‘ முதனிலை ‘ எனவும் குறிக்கப்பட்டது.
எ-டு:
கண்ணன் – பகுதி கண்.
நாடன் – இதன் பகுதி நாடு.
இவை ‘ பெயர்ப் பகுபதம் ‘ ஆகும். இங்கு பகுதி பெயரை உணர்த்தியது.
படிப்பான் – படி பகுதி.
கொன்றான் – கொல் பகுதி.
தந்தான் – தா பகுதி.
இவை ‘ வினைப் பகுபதம் ‘
பகுதி வினையை உணர்த்தியது.
2
விகுதி :
ஒரு பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு ‘ விகுதி ‘ எனப்படும். விகுதியை ‘ இறுதிநிலை’ என்று தொல்காப்பியம் குறிக்கிறது.
வினைமுற்றுப் பகுபதத்தின் விகுதியானது திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள் ஆகியவற்றை உணர்த்தும்.
“அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம் மார்
அ ஆ கு டு து று என் ஏன் அல் அன்
அம் ஆம் எம் ஏம் ஓமொடு உம் ஊர்
கடதற ஐ ஆய் இம் மின் இர் ஈர்
ஈயர் கயவும் என்பவும் பிறவும்
வினையின் விகுதி பெயரினும் சிலவே “
( நன்னூல் 140)
3
இடைநிலை :
ஒரு பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு
‘ இடைநிலை’ ஆம். இது பெயர் இடைநிலை, வினை இடைநிலை என இருவகைப்படும்.
எ-டு:
தலைவர் – தலை+வ்+ அர்
( வ் காலங்காட்டா இடை நிலை)
தலைவி – தலை+ வ்+ இ
இவ்விரண்டும் பெயர்இடைநிலை.
வினை இடை நிலை – இது மூன்று காலமும் காட்டும். அவை:
நிகழ்கால இடைநிலை
இறந்தகால இடைநிலை
எதிர்கால இடைநிலை.
” ஆநின்று கின்று கிறு மூவிடத்தின்
ஐம்பால் நிகழ் பொழுதறை வினை இடை
நிலை ” ( நன்னூல் 143. )
இவை நிகழ்கால இடை நிலைகள்.
எ-டு:
ஓடுகிறான் – ஓடு+கிறு+ஆன்
பேசுகின்றான் – பேசு+கின்று+ஆன்
பேசாநின்றாள் – பேசு+ஆநின்று+ ஆள்
இறந்தகால இடைநிலைகள் :
“தடறவொற் றின்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தருந்தொழில் இடைநிலை” ( 142)
எ-டு:
செய்தான் – செய்+த்+ஆன்
உண்டான் – உண்+ட்+ஆன்
தின்றான் – தின்+ற்+ஆன்
உறங்கினான் – உறங்கு+இன்+ஆன்
எதிர்கால இடைநிலைகள்:
” பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை ஆமிவை சில இல ” ( 144)
எ-டு:
காண்பான் – காண்+ப்+ ஆன்
கூறுவாள் – கூறு+வ்+ஆள்
– வகுப்பு 35 நிறைவு –