இலக்கண வகுப்பு – 16
தொல்:சொல்: (சேனாவரையம்) கிளவி யாக்கம் ( தொடர்ச்சி) :
1
சென்ற வகுப்பில் ஆணறி சொல், பெண்ணறி சொல், பலவோரறி சொல், ஆணறி சொல்லிறுதி, பெண்ணறி சொல்லிறுதி, பலவோரறி சொல்லிறுதி, பால் வேறுபாடுகள், ஒன்றன் பாலிறுதி என்பன பற்றிக் கற்றோம்,
இப்போது பலவின் பாலீறுகளைப் பார்ப்போம்:
2
” அஆவ எனவரூம் இறுதி அப்பால் மூன்றே பலவறி சொல்லே ” ( 9-492 )
இ-ள்:
பலவறி சொல்லாவன அ ஆ வ எனவரும் இறுதியை உடைய அக்கூற்று மூன்றேயாம் எ-று
எ-டு:
பறவைகள் உண்டன ( அ )
புலிகள் புல் உண்ணா ( ஆ )
ஆடுகள் கீரை உண்குவ ( வ )- இது பண்டைய வழக்கு, இன்று ‘ ஆடுகள் கீரை உண்பவை ‘ என வழங்கும். வ என்றது வை ஆகி ஒரே வர்க்கமானது காண்க.
அ ஈறு–
‘ கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை..’
(திருப்பள்ளியெழுச்சி/மணிவாசகர். ஓவின – மங்கின)
ஆ ஈறு– வாரா போகா
” வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா —- இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் ” ( நல்வழி -5)
வ ஈறு — கம்பன், பால காண்டம், நாட்டுப்படலம்:
” தாமரைப்படுவ வண்டும்
தகைவரும் திருவும் தண்தார்க்/ காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன்அம்பும்/ மாமுகிற் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்/ நாமுதற் படுவ மெய்யும் நாமநூல் பொருளு மன்னோ “
(படுவ – தங்கும், அணையும். வாரி – கடல்.
வயங்கு – ஒளிவிளங்கு)
3
இதுவரை கற்ற ன் ள் ர் ப மார் து று டு அ ஆ வ ஆகிய 11 ஈற்றெழுத்துகள் வினை ஈறுகளாகவும் வரும் என்பதை அறிந்து கொள்க.
4
இனி இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்பன பற்றி நோக்குவோம்:
” தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே “
(17-500)
இ-ள்:
தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் நடக்கும் இலக்கணத்தில் பக்கச் சொல் கடியப்படா எ-று
தகுதி வழக்கு :
ஒரு பொருளை அதற்குரிய சொல்லால் சொன்னால் அது தகுதியடையதல்ல எனக் கருதி, தகுதியுடைய வேறொரு சொல்லால் சொல்லுதல் ” தகுதி வழக்கு ” ஆகும். இது 3 வகைப்படும்.
1
மங்கலம் — செத்தாரைச் துஞ்சினார் என்றல்
2
இடக்கரடக்கல் — மலங்கழுவுதலைக் கால் கழுவுதல் என்றல்
3
குழூஉக் குறி — வேடர் கள்ளை ‘ சொல்விளம்பி ‘ என்றல், பொற்கொல்லர் தங்கத்தைப் ‘ பறி ‘ என்றல்.
இயல்பு வழக்கு :
ஏதாவது ஒரு பொருளுக்கு இயல்பாகவே அமைந்த சொல்லால் வழங்குவது
‘ இயல்பு வழக்கு ‘ ஆகும்.
இதுவும் 3 வகையாகும்.
1
இலக்கணமுடையது:
நிலம் நீர் தீ வளி வெளி
2
இலக்கணப் போலி:
இல்முன் – முன்றில். மயல் – மையல்
3
மரூஉ :
சோழநாடு – சோணாடு
தஞ்சாவூர் – தஞ்சை
தெங்கங்காய் – தேங்காய்
பருத்தித்துறை – பருத்துறை
5
அடுத்து ‘ சினைமுதற் சொற்கள் ‘ அமையும் முறை பற்றி இச் சூத்திரம் உரைக்கிறது:
” இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின்
உம்மை வேண்டும் “
(33-
இ-ள்:
கேட்போரான் இத்துணை என்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும், முதற் கிளவிக்கும் வினைப்படு தொகுதிக் கண் உம்மை கொடுத்துச் சொல்லுக எ-று
எ-டு:
ஔவையின் ‘ விநாயகர் அகவல் : சீதக்களபச் …
” பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ்
ஒளி மார்பும் ……….”
(இங்கு சினைக் கிளவிக்கும், முதற் கிளவிக்கும் ‘ உம் ‘ மை கொடுத்து ஔவைக் கிழவி பாடியுள்ளமை வியப்பாக உள்ளதல்லவா? )
-மிகுதி வரும் –
மேலும் ‘ முதற் கிளவிக்கு ‘ உம்மை சேர்த்த ஔவைக் கிளவியின் அதிசயத் தமிழைச் சுவைப்போம்!
” பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் — கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா “
( மேலும் உலகில் இல்லாத பொருளைக் குறித்துச் சொல்லும் போதும் உம்மை வரும் என்கிறார் தொல்காப்பியர்.
எ-டு:
குருடு காண்டல் பகலிலும் இல்லை, முயற் கொம்பு உலகெங்கும் கிடையா, குதிரைக் கொம்பு தேடினும் வரா. )
6
தொடர்ந்து, வேறுபட்ட வினைகளையுடைய பொருளை பொதுவான ஒரு சொல் கொண்டு குறிக்கலாம்.
” வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை
கிளவார் ” ( 46-
இ-ள்:
வேறுபட்ட வினைகளையுடைய பல பொருட்கு பொதுவாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையாய்க் கொள்ளார், அதாவது பொது வினையாகக் கொள்வார் என்பது பெறப்பட்டது.
எ-டு:
அடிசில் அயின்றார். அடிசில் = உணவு. ஓர் உணவானது உண்ணல், தின்னல், பருகுதல், நக்குதல் ஆகிய நான்கு வினைகளுக்கு உரியதாகும். இந் நால்வகை வினைகளை ஒன்றாகச் செய்வதையே
‘ அயின்றார் ‘ என்ற சொல் குறிக்கும். இது பொதுச் சொல்லாகும்.
ஆக ” அயின்றேன் ” என்று சொன்னால், ஒரு உணவை அந்நாலுவகை வினையினாலும் சாப்பிட்டேன் என்பது பொருளாகும். ஆக அயின்றேன் என்று கூறாது ஒரு/இரு வினைகளை மட்டும் கூறுதல் வழுவாகும் என்றார் தொல்காப்பியர்.
— இவ் வகுப்பு நிறைவு –
ஐயா, ஔவைக்கு ‘ கிழவி ‘ எனக் குறிக்கவும், நன்றி