இலக்கண வகுப்பு -17
தொல்:சொல்: கிளவியாக்கம், இயல் 1(தொடர்ச்சி)
1
இரட்டைக்கிளவி…
வகுப்பு 16 – சேர்க்கவும்
2
இனி, ‘ எண்ணுக்குப் புறனடை ‘ எவ்வாறு அமையும் என்ற விளக்கம் யாது எனப் பார்ப்போம்:
பன்மை குறித்து நிற்கும் சினைப் பெயர்களை ஒருமையிற் சுட்டும் இலக்கணவியல்பை இச் சூத்திரம் காட்டுகிறது:
” கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறும் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே “
( 61)
இ-ள்:
கண் முதலாகப் பிறவும் பன்மை குறித்து நின்ற சினைநிலைக் கிளவி. அவை பன்மையினாலேயே உணர்த்தப்பட வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது. முதல் ஒருமையாகவும், பன்மையாகவும் வரலாம் எ-று
எ-டு:
கண் அல்லள் – ஒருமை
கண் அல்லர் – பன்மை
இரு கூற்றிலும் ‘ கண் ‘ என்றே வந்தது. ஆகவே கண், தோள், முலை, கை, கால், பாதம், புருவம், காது ஆகிய இரண்டாகவுள்ள பன்மைச் சினைக் கிளவிகளை ஒருமையில் இசைப்பது வழுவல்ல எனத் தொல்காப்பியர் வழுவமைதி அமைத்துள்ளார்.
1– சேந்தனார், திருவிசைப்பா:
” கற்றவர் விழுங்கும்….
கண்டு கண்டுள்ளம் குளிர
என் கண் குளிர்ந்தனவே”
2
கம்பநாடனும், மிதிலைக் காட்சிப் படலத்திலே
” தோள் கண்டார் தோளே கண்டார்
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்….”
3
ஞானசம்பந்தப் பெருமான், திருவண்ணா மலைத் திருப்பதிகம்:
” உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் …”
4
காரைக்காலம்மை, திருவாலங்கான்டுத் திருப்பதிகத்திலே;
” கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண்
வெண்பற்குழி….புழுதி துடைத்து முலை கொடுத்து…. அப்பன் இடம் திருவாலங் காடே “
— கிளவியாக்கம் நிறைவு —
அடுத்து, சொல்லதிகாரம் – இயல் 2,
‘ வேற்றுமையியல் ‘
ஏற்கனவே எழுத்ததிகார விளக்கங்களிலே ஆங்காங்கே பார்த்தோம். ஆயினும் இது ஒரு தனி இயலாகத் தொல்காப்பியர் அமைத்துள்ளார். மேலும் அடுத்து வரும் இயல்களான வேற்றுமை மயங்கியல், விளிமரபு ஆகிய இயல்களிலும் வேற்றுமை பற்றியே அவர் விளக்குகிறார்.
1
பெயர்கள் உருபுகளை ஏற்றுப் பொருள் வேறுபடுதல் ‘ வேற்றுமை ‘ என அறிகிறோம். ஒரு வேற்றுமைச் சொல்லில் உருபு, அது கொள்ளும் பெயர், அது கொண்டு முடியும் வினைச்சொல் ஆகிய மூன்னும் சேர்ந்திருக்கும்.
” வேற்றுமை தாமே ஏழென மொழிப “( 62)
இ-ள்:
வேற்றுமையாவன ஏழென்று சொல்வர் எ-று
2
அடுத்த சூத்திரத்திலே அவை எட்டு என்கிறார்.
” விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே ” (63)
இ-ள்:
விளி கொள்வதன் கண்ணதாகிய விளியோடு வேற்றுமைகள் எட்டாம் எ-று
விளி வேற்றுமை என்பது திரிந்தும், இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி ஆகும்.
3
எட்டு வேற்றுமைகளின் பெயர்கள் யாவை என்பதை இச் சூத்திரம் உரைக்கிறது :
” அவைதாம்;
பெயர் ஐ ஒடு கு இன் அது
கண்விளி யென்னும் ஈற்ற”
இ-ள்:
எட்டெனப்பட்ட வேற்றுமையாவன விளி வேற்றுமையை இறுதியாகவுடைய பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண்ணாம் எ-று-
–இவ்வகுப்பு நிறைவு –